விளையாட்டு மைதானங்களில் 100 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது: தமிழக அரசு உத்தரவு

சென்னை: விளையாட்டு மைதானங்களில் 100 பேருக்கு மேல் அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் நேற்று வெளியிட்டு அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி உரிய பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்து மத்திய அரசின் வழிமுறைகளை பின்பற்றி பொது பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உடற்பயிற்சி மற்றும் அனைத்து வகையான விளையாட்டுக்காக திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு விளையாட்டு மைதானங்களில் அனுமதி இல்லை.

விளையாட்டு மைதானங்களின் நுழைவு பகுதியில் சானிடைசர் வைக்கப்பட வேண்டும். உள்ளே வருபவர்களுக்கு கண்டிப்பாக தெர்மல் ஸ்கேன் மூலம் சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து வீரர்களும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மைதானங்களில் கண்டிப்பாக எச்சில் துப்பக்கூடாது. முதல்கட்டமாக விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் என மொத்தம் 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்பட வேண்டும். தண்ணீர் அவர்களே எடுத்து வர வேண்டும். விளையாட்டு மைதானங்களில் உள்ள கழிவறைகள் சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். மைதான அதிகாரிகள், பயிற்சியாளர்கள் டோக்கன் முறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே மைதானங்களை பயன்படுத்த வேண்டும்.

சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஊழியர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். மைதானங்களுக்குள் நொறுக்கு தீனிகள், உணவு பண்டங்கள் விற்பனை செய்யக்கூடாது. பராமரிப்பு பணியாளர்கள் முகக்கவசம், கையுறை, ஷூ கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். 65 வயதுக்கு மேல் உள்ளவர்கள், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களை மைதானத்துக்குள் அனுமதிக்க கூடாது. காலை, மாலை உடற்பயிற்சி செய்பவர்கள் உரிய இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: