தளர்வுகள் எதிரொலி : கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயத்தை எப்படி கையாள்வது ? : மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அப்போது, தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 5 மாதங்களாக  ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பொதுமக்கள் வசதிக்காக பல்வேறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டது. முக்கியமாக கடந்த 1ம் தேதி முதல் மாவட்டத்துக்குள் பஸ் போக்குவரத்து, வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி, மால்கள், பூங்காக்கள் திறப்பு உள்ளிட்ட முக்கிய தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதேபோன்று இ-பாஸ் நடைமுறையும் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தளர்வுகளால் தமிழகம் முழுவதும் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலை திரும்பியுள்ளது. இந்த நிலையில், நேற்று முதல் தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டங்களுக்கு அரசு பேருந்து சேவை, ரயில் போக்குவரத்து சேவையும் தொடங்கியது. இதனால் மக்கள் அதிகளவில் வீட்டை விட்டு வெளியே வர வாய்ப்புள்ளது. இதனால் கொரோனா பரவும் ஆபத்தும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபோன்ற சூழ்நிலையை சமாளிப்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை, தலைமை செயலகத்தில் மருத்துவ நிபுணர் குழுவினர் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கடந்த 1ம் தேதி மற்றும் 7ம் தேதி முதல் புதிதாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகம் முழுவதும் அனைத்து பொது இடங்களிலும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும்.

இதனால் கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. தற்போது கடந்த 1 மாதமாக தினசரி சுமார் 6 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அடுத்த மாதம் கொரோனா தொற்று அதிகரிக்கும் ஆபத்து இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர். தடுப்பூசி நடைமுறைக்கு வர சில மாதங்கள் ஆகலாம் என்பதால், வருகிற 2, 3 மாதங்கள் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு தவிர, வேறு என்ன வழிகளை கடைபிடிக்கலாம் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்பட உள்ளது.

Related Stories: