வேலை கேட்பது போல் நடித்து தொழிலாளியின் குழந்தையை கடத்திய வடமாநில வாலிபர்: போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: வேலை கேட்பது போல் நடித்து கட்டுமான தொழிலாளியின் பெண் குழந்தையை கடத்தி சென்ற வடமாநில வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். மேற்கு வங்காளம் பகுதியை சேர்ந்தவர்  பப்லு (39). இவர், தனது மனைவி மற்றும் 4 குழந்தைகளுடன் ராயபுரம் ரயில் நிலையம் அருகே, தற்காலிக குடியிருப்பில் தங்கி, கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் இவர், தனது நண்பரை சந்திக்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பியபோது, சென்ட்ரல் பேருந்து நிலையத்தில் இவரை சந்தித்த 25 வயது மதிக்கத்தக்க வாலிபர், ‘‘நான் அசாம் மாநிலத்தை சேர்ந்தவன்.

சென்னையில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறேன். எனக்கு ஏதாவது வேலை வாங்கி கொடுக்க முடியுமா,’’ என கேட்டுள்ளார். அவருக்கு உதவ நினைத்த பப்லு, தனது வீட்டிற்கு அவரை அழைத்து வந்துள்ளார். பின்னர், தான் வேலை செய்யும் இடத்தில் ஏதாவது வேலை வாங்கி தருவதாக கூறினார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. பின்னர், தனது வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பப்லு வெளியே சென்றுள்ளார். வீட்டில் இருந்த அந்த வாலிபர், பப்லுவின் குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்கித் தருவதாக கூறி 3 பேரை அழைத்துச் சென்றுள்ளார்.

இதில், 2 குழந்தைகள் மட்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மரிஜூன (3) என்ற பெண் குழந்தையுடன் அந்த வாலிபர் மாயமானார். இதனால், அதிர்ச்சியடைந்த பப்லு, அப்பகுதி முழுவதும் தேடி உள்ளார். ஆனால், கிடைக்கவில்லை. இதையடுத்து, ராயபுரம் காவல் நிலையத்தில் நேற்று இதுபற்றி புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் ராயபுரம் போலீசார் வழக்கு பதிந்து, அங்குள்ள சிசிடிவி பதிவுகள் மூலம் மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: