வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை: எம்.பி. திருச்சி சிவாவின் குற்றச்சாட்டிற்கு நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி: வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு பிரச்சாரங்கள் எழுந்து வருகிறது.கடந்த சில தினங்கள் முன் சென்னை ஏர்போர்ட்டில் திமுக எம்பி கனிமொழியிடம் காவலர் ஒருவர் இந்தி தெரியாதா என்று கேட்டது பெரிய சர்ச்சை ஆனது. திமுக எம்பி கனிமொழியை பார்த்து நீங்கள் இந்தியரா என்று கேள்வி கேட்ட சர்ச்சை இன்னும் முடியவில்லை. இதை தொடர்ந்து நேற்று முதல் நாள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்திக்கு எதிராக நான் தமிழ் பேசும் இந்தியன் என்று டி-சர்ட் அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார். இவரை தொடர்ந்து இணையத்தில் நடிகர்கள், பிரபலங்கள் பலர் நான் தமிழ் பேசும் இந்தியன் என்றும், இந்தி தெரியாது போடா என்றும் டி-சர்ட் அணிந்து புகைப்படம் வெளியிட்டனர். இதனால் இணையத்தில் #இந்தி_தெரியாது_போடா டேக் வைரலாக தொடங்கியது.

நாள் முழுக்க இதில் தமிழர்கள் இந்தி திணிப்பிற்கு எதிராக ட்வீட் செய்து வந்தனர். இந்த நிலையில், திமுக எம்.பி திருச்சி சிவா புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களில் பிராந்திய மொழிகள் அகற்றப்படுவதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம், உடனடியாக நிலைமையை மீட்டெடுக்க வலியுறுத்துகிறோம், என கூறியிருந்தார். இந்நிலையில், திருச்சி சிவாவின் குற்றச்சாட்டிற்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். திருச்சி சிவாவின் ட்வீட்டிற்கு பதிலளித்துள்ள அவர், மத்திய அரசின் நிதி அமைச்சரகத்திலிருந்து வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிருத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. பிறப்பிக்கும் எண்ணமோ/நோக்கமோ இல்லை. எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும். உடனே நடவடிக்கை எடுக்கப்படும், என கூறியுள்ளார்.

Related Stories: