ஆற்காட்டில் பரபரப்பு போலீஸ் நிலைய வளாகத்தில் பயங்கர வெடிச்சத்தம்: அலறியடித்து போலீசார் ஓட்டம்

ஆற்காடு: ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு டவுன் போலீஸ் நிலையம் ஆரணி சாலையில் இயங்கி வருகிறது. விதி மீறல், கடத்தல், திருடப்பட்டவை உள்ளிட்ட வாகனங்கள், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இங்குள்ள வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஏராளமான வாகனங்களும், பொருட்களும் உள்ளன. இந்நிலையில், நேற்று காலை காவல் நிலையத்தின் மதில்சுவர் அருகே திடீரென பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. உடனே காவல்நிலையத்தில் இருந்த போலீசார் அலறியடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர். சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த சத்தம் கேட்டதால் சுற்றுப்புற பகுதிகளில் வீட்டில் இருந்தவர்கள் தெருவுக்கு ஓடி வந்தனர். அப்போது வெடிகுண்டு ஏதோ வெடித்துவிட்டதாக பேசிக்கொண்டனர்.

இதற்கிடையில் வெடிவிபத்து ஏற்பட்ட இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கிருந்த பொருட்கள் எல்லாம் சிதறிக்கிடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், `சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புற பகுதியில் ஏதோ ஒரு கோயில் திருவிழா நடந்துள்ளது. இதற்காக அனுமதியின்றி வைத்திருந்த அதிசக்தி வாய்ந்த வெடியை போலீசார் பறிமுதல் செய்து காவல்நிலைய வளாகத்தில் வைத்திருந்துள்ளனர். 12 ஆண்டுகளாகியும் அகற்றாமல் இருந்த நிலையில் நேற்று காலை அது வெடித்தது தெரியவந்தது’. காவல்நிலைய வளாகத்தில், காத்திருப்பு அறையின் அருகே உடற்பயிற்சி கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதனால் பழைய பொருட்களை போலீசார் சில தினங்களுக்கு முன் அப்புறப்படுத்தியுள்ளனர். அதனுடன் வெடிகள் இருந்த மூட்டையையும் அகற்றி மதில் சுவர் அருகே வைத்துள்ளனர். அந்த வெடி தற்போது வெடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: