இந்தியாவிலேயே முன்னோடி மாநிலம் என்று தம்பட்டம் அடித்து கொள்வதை தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்: தமிழக காங்கிரஸ் தலைவர் கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை:

மாநில தொழில் சீர்த்திருத்த செயல்திட்டம்-2019 அடிப்படையில் எளிதாக தொழில் நடத்துவதற்கான சூழலை மேம்படுத்தும் மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் எளிதாக தொழில் நடத்துவதற்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதல் இடம் வகிக்கிறது. தமிழகம் பதினான்காவது இடத்தில் உள்ளது. இந்த தரவரிசை  பட்டியலை டெல்லியில் தொழில் வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். ஆனால் எளிதாக தொழில் நடத்த உகந்த மாநிலங்களில் பதினான்காவது இடத்தில் இருக்கிற தமிழகம், தமிழக முதல்வர் எடப்பாடியின் அறிவிப்பின் படி மொத்தம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரத்து 895 கோடி முதலீடுகள் பெற்றிருக்கிறது.

தமிழக முதல்வர் அறிவித்திருக்கிற முதலீட்டு தொகைக்கும், வேலை வாய்ப்பு எண்ணிக்கைக்கும் என்ன அடிப்படை ஆதாரம் என்று எவராலும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அறிவிப்புகள் எல்லாம் ஒரே மர்மமாக இருக்கின்றன. கடந்த ஜூலை 31ம் தேதி நிலவரப்படி வேலைவாய்ப்பு பதிவு அலுவலகத்தில் 66.37 லட்சம் பேர் பதிவு செய்து வேலைக்காக பல ஆண்டுகளாக காத்திருக்கிறார்கள் என்று வேலைவாய்ப்பு பதிவு அலுவலகக் குறிப்பு கூறுகிறது.இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பதை இனியாவது தமிழக ஆட்சியாளர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி குன்றி, தாழ்ந்த நிலைக்கு சென்றுகொண்டிருப்பதை மத்திய அரசின் தரைவரிசைப் பட்டியலே அம்பலப்படுத்தியிருப்பதை தமிழக முதல்வர் உணர வேண்டும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: