நள்ளிரவில் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லும்போது கொரோனா பாதித்த இளம்பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த டிரைவர்: கேரளாவில் பரபரப்பு சம்பவம்

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில், ஆம்புலன்சில் பலாத்காரம் செய்த டிரைவர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம், ஆரம்முளாவை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணுக்கு கொரோனா அறிகுறிகள் இருந்ததால்,அடூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், மேல் சிகிச்சைக்காக பந்தளம் மருத்துவமனைக்கு நள்ளிரவில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். அவருடன் கோழஞ்சேரி மருத்துவமனைக்கு மற்றொரு நோயாளியும் சென்றார்.

ஆம்புலன்சை காயங்குளத்தை சேர்ந்த நவுபல் ஓட்டினார். கோழஞ்சேரியில் அந்த நோயாளியை இறக்கிவிட்டு, இளம்பெண்ணுடன் பந்தளம் நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது. அப்போது, வழியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த இளம்பெண்ணை நவுபல் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், பந்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு நழுவிவிட்டார். இது குறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், நவுபலை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், நவுபலுக்கு கொலை உள்பட பல கிரிமினல் வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. நவுபல் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்த பலாத்காரம் பற்றி விசாரணை நடத்த கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்கட்சியினர் போராட்டம் நடத்தினர். பத்தனம்திட்டா மாவட்ட மருத்துவ அலுவலர் அலுவலகம் முன்பு பாஜ நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். இந்த பலாத்கார சம்பவம் பற்றி மாநில மகளிர் ஆணையமும், மனித உரிமை ஆணையமும் வழக்குப்பதிவு செய்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி, பத்தனம்திட்டா மாவட்ட எஸ்பி.க்கு இந்த இரு ஆணையங்களும் உத்தரவிட்டுள்ளன.

* அமைச்சர் பதவி விலக வேண்டும்

கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா கூறுகையில், ‘‘கொலை வழக்கில் தொடர்புடைய கிரிமினல் குற்றவாளி, எப்படி ஆம்புலன்ஸ் டிரைவராக நியமிக்கப்பட்டார்? இதற்கு சுகாதாரத் துறைதான் பொறுப்பேற்க வேண்டும்,’’ என்றார்.

பாஜ மாநில தலைவர் சுரேந்திரன் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் கேரளாவுக்கு அவமானம். இதற்கு பொறுப்பேற்று சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா பதவி விலக வேண்டும்,’’ என்றார்.

* மன்னிப்பு கேட்ட டிரைவர்

பத்தனம்திட்டா எஸ்பி சைமன் கூறுகையில், ‘‘ஆம்புலன்சில் வைத்து பலாத்காரம் செய்த பின்னர், இளம்பெண்ணிடம் டிரைவர் நவுபல் மன்னிப்பு கேட்டுள்ளார். ‘நான் செய்தது மிகவும் தவறான செயல். யாரிடமும் தயவு செய்து இது குறித்து கூற வேண்டாம்,’ என கெஞ்சியுள்ளார். அதை அந்த டிரைவருக்கு தெரியாமல் இளம்பெண் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இதுதான், இந்த வழக்கில் முக்கிய சாட்சியமாக உள்ளது. தற்போது அந்த டிரைவர் வேலையில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்,’’ என்றார்.

Related Stories: