அபுதாபியில் செப். 19ல் தொடங்குகிறது ஐபிஎல் டி20 தொடர் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் மும்பை-சென்னை மோதல்

மும்பை: ஐபிஎல் டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் செப்.19ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பிரச்னையால் தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் (யுஏஇ) செப்.19ம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக அங்குள்ள துபாய், ஷார்ஜா, அபுதாபி நகரங்களில் 8 ஐபிஎல் அணிகளும் முகாமிட்டு பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் ஐபிஎல் போட்டி அட்டவணை நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி செப்.19ம் தேதி தொடங்கும் முதல் லீக் ஆட்டம் அபுதாபியில் நடைபெற உள்ளது. மொத்தம் 56 லீக் போட்டிகள் நவ.3ம் தேதி வரை நடைபெறும். இவற்றில் துபாயில் 24 போட்டிகளும், அபுதாபியில் 20 போட்டிகளும், ஷார்ஜாவில் 12 போட்டிகளும் நடைபெறும்.

போட்டிகள் இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கும், இரவு 7.30 மணிக்கும் தொடங்கி நடைபெறும். சில சனி, ஞாயிற்றுகிழமைகளில் என 10 நாட்கள் மட்டும் ஒரே நாளில் தலா 2 ஆட்டங்கள் நடைபெறும். போட்டிகள் பூட்டிய அரங்கில் ரசிகர்கள் இல்லாமல் நடக்கும். அபுதாபியில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் எதிர்பார்த்தபடி நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், கடந்த முறை 2வது இடம் பிடித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. நாக் அவுட் சுற்று போட்டிகள் நடைபெறும் தேதி, இறுதிப் போட்டி நடைபெறும் இடம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும் என்று போட்டி அட்டவணையை அறிவித்த பிசிசிஐ கவுரவ செயலாளர் ஜெய்ஷா தெரிவித்தார்.  இறுதிப் போட்டி நவ.10ம் தேதி நடைபெறும்.

Related Stories: