கொரோனாவால் நீண்ட விடுப்பில் செல்லும் போலீசார்; ஆள் பற்றாக்குறையால் திணறும் புதுச்சேரி காவல் நிலையங்கள்: மனஉளைச்சலில் அதிகாரிகள்

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு மாதந்தோறும் அதிகமாகி வரும் நிலையில், கொரோனா பாதிப்புக்குள்ளான போலீசார் நீண்ட விடுப்பில் செல்கின்றனர். இதனால் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் ஆள் பற்றாக்குறையால் வேலைப்பளு அதிகமாகி அதிகாரிகள் மனஉளைச்சலில் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 16 ஆயிரத்தை கடந்து விட்டது. உயிரிழப்பும் தேசிய சராசரி அளவை கடந்துள்ளது. கொரோனாவால் பாதித்து இறந்தவர்களின் சடலங்களை எரிக்க வாகனங்கள் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் பொதுமக்களுடன் நேரடி தொடர்பில் இருந்த காவலர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தடுப்பு பணிகளில் வேகம் காட்டிய காவலர்கள் அடுத்த கடந்த 3 மாதங்களில் அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகினர். தற்போதைய நிலவரப்படி கொரோனா நோய் தொற்றுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 250க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கதிர்காமம், ஜிப்மர் மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், ஏஎஸ்ஐக்கள், ஏட்டுகள், காவலர்கள் மட்டுமின்றி மகளிர் போலீசார், ஐஆர்பிஎன், ஊர்க்காவல் படை வீரர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதுபோன்ற காரணங்களால் ஒரு காவல் நிலையத்தில் சராசரியாக 10 நபர்கள் வரை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு நீண்ட விடுப்பில் சென்று விட்டனர். இதனால் அங்கு பணியில் இருக்கும் காவலர்களுக்கு கூடுதல் வேலைப்பளு ஏற்பட்டுள்ளது. அதேவேளையில் வழக்கமான சட்டம்- ஒழுங்கு, டிராபிக் பணிகளுடன் கொரோனா விதி மீறிலில் ஈடுபடுவோரிடம் அபராதம் வசூலிப்பது, கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீடுகளை கண்காணிப்பது,

வழக்குகள் தொடர்பான நீதிமன்ற அன்றாட பணிகளை மேற்கொள்வது, விஐபி பாதுகாப்பு போன்ற பணிகளிலும், அவர்கள் தீவிரமாக ஈடுபட வேண்டுமென உயர்அதிகாரிகளிடம் இருந்து அழுத்தம் கொடுக்கப்படுவதால் காவல் நிலையங்களில் பணியில் உள்ள இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் கடுமையான மனஉளைச்சலில் உள்ளனர். குறைவான பணியாளர்களை வைத்துக் கொண்டு இத்தனை வேலைகளை ஒரே நேரத்தில் எப்படி  செய்வது? என்று தங்களது ஆதங்கத்தை மேல்அதிகாரிகளிடம் தற்போது வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். புதுச்சேரியில் காவலர் தேர்வு நடத்தாமல் 2 வருடமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் நிலையில்,

காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவலர்கள் வலியுறுத்துகின்றனர். மேலும் பதவி உயர்வு, கூடுதல் பணிக்கால ஊதியம் உள்ளிட்ட சலுகைகளை காலத்தோடு வழங்க வேண்டுமெனவும் ேபாலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கவர்னரும், முதல்வரும் நடவடிக்கை எடுப்பார்களா?.

Related Stories: