திறக்கப்படும் தண்ணீர் சிரமமில்லாமல் வந்து சேர கிருஷ்ணா கால்வாய் கரைகளை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஆந்திர - தமிழக நதிநீர் ஒப்பந்தப்படி ஆந்திர அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி தண்ணீரும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி தண்ணீரும், 3 டி.எம்.சி சேதாரம் என மொத்தம் 15 டி.எம்.சி தண்ணீர் தரவேண்டும். ஆனால் ஜூலை மாதம் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை ஆந்திர அரசு வழங்கவில்லை. இந்நிலையில் தெலுங்கு கங்கா திட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டம் திருப்பதியில் கடந்த வாரம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆந்திர மற்றும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் தமிழக அரசு சார்பில் முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, சென்னை மண்டல நீர்வள தலைமை பொறியாளர் அசோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் சென்னை மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது இதற்கு ஆந்திர அரசு சார்பில் இம்மாதம் 14ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் அல்லது அணையில் 30 டிஎம்சி எட்டியவுடன் தண்ணீர் தரப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் கிருஷ்ணா கால்வாய் கரைகள் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து அம்பேத்கர் நகர் , அனந்தேரி, போந்தவாக்கம், கலவை போன்ற பகுதிகளில் புதர்மண்டி கால்வாய் இருபுறமும் கரைகள் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைத்தால்தான் ஆந்திர அரசு நமக்கு தண்ணீர் வழங்கும்போது வீணாகாமல் பூண்டி ஏரியை சிரமமில்லாமல் வந்து அடையும். எனவே, பொதுப்பனித்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: