பீகார் தேர்தலுடன் சேர்த்து 65 தொகுதிக்கு இடைத்தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலுடன், நிலுவையில் உள்ள 65 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஒன்றாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மத்தியப்பிரதேசத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 27 பேர் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணைந்தனர். இதனால் காலியான 27 தொகுதிகள் உட்பட  பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 64 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒரு மக்களவை தொகுதி காலியாக உள்ளது. பீகார் சட்டமன்றத்துக்கான பதவிக்காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகின்றது. எனவே இந்த தேர்தல் அக்டோபர்-நவம்பரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே 65 தொகுதி இடைத்தேர்தல் மற்றும் பீகார் சட்டமன்ற தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘பல்வேறு மாநிலங்களில் 64 சட்டமன்ற தொகுதி மற்றும் ஒரு மக்களவை தொகுதி காலியாக உள்ளது. 65 தொகுதிக்கான இடைத்தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும். இதற்கான தேர்தல் அட்டவணை உரிய நேரத்தில் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டீஸ்கர், அரியானா, கர்நாடகா, மேற்கு வங்கத்தில் தலா ஒரு தொகுதி, அசாம், ஜார்கண்ட், கேரளா, நாகலாந்து மற்றும் ஒடிசாவில் தலா 2 தொகுதிகள் காலியாக உள்ளன. மணிப்பூரில் 5 சட்டமன்ற தொகுதிகள் மற்றும் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் தலா 8 தொகுதிகள் காலியாக உள்ளது. பீகாரில் வால்மீகி நகர் மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நிலுவையில் உள்ளது. தமிழகத்தில் குடியாத்தம் , திருவொற்றியூர், திருவல்லிக்கேணி சேப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகள் காலியாக உள்ளன. சமீபத்தில் எம்பி வசந்த்குமார் உயிரிழந்ததை அடுத்து கன்னியாகுமரி மக்களவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. எனவே இதில் எத்தனை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்பது தேர்தல் ஆணையத்தில் இறுதி அறிவிப்பிலேயே தெரியவரும்.

Related Stories: