சென்னையில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடிக்காத தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஹர்மந்தர் சிங் தலைமையில் இன்று நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சராசரியாக நாள்தோறும் 12 ஆயிரம் கொரோனா தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாள்தோறும் 500 முதல் 600 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.

தற்போது ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர். எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி விட்டு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் அபராதமும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்படும் என்று ஹர்மந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Related Stories: