திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வு: பொருளாளராக டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகிறார்

சென்னை: திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் போட்டியின்றி தேர்வாகின்றனர். திமுக பொது செயலாளராக இருந்த க.அன்பழகன் (98), கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி காலமானார். மறைந்த அன்பழகன் 1977ம் ஆண்டு முதல் திமுக பொதுச் செயலாளராக இருந்து வந்தார். சுமார் 43 ஆண்டுகள் அந்த பொறுப்பில் அவர் இருந்தார். இந்த நிலையில் வருகிற 9ம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதற்கு முன்னதாக பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெறும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி வேட்புமனு தாக்கல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கியது. மாலை 4 மணி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் திமுக பொது செயலாளர் பதவிக்கு துரைமுருகன் வேட்புமனு தாக்கல் செய்தார். பொருளாளர் பதவிக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு வேட்புமனு தாக்கல் செய்தார். அவர்கள் தவிர வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதைத் தொடர்ந்து திமுகவின் 6வது பொது செயலாளராக துரைமுருகன் போட்டியின்றி தேர்வாகிறார். அதே போல் பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலுவும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இன்று காலை 11 மணியளவில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. அதன் பிறகு பொது செயலாளர், பொருளாளர் பதவிக்கு வெற்றி பெற்றதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

* பொது செயலாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்த பிறகு துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

வரலாற்று சிறப்புமிக்க ஒரு மாபெரும் இயக்கம் திமுக. அந்த இயக்கத்தில் பொது செயலாளர் பொறுப்பு என்பது மிக உயர்ந்தது மட்டுமல்ல, பொறுப்பு வாய்ந்தது. பல கடமைகளை உள்ளடக்கியது. அந்த இயக்கத்தில் பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், பேராசிரியர் ஆகியோர் பொது செயலாளராக இருந்திருக்கிறார்கள். அந்த 3 பெரும் தலைவர்களை அடுத்து நான் அந்த பதவிக்கு வந்திருக்கிறேன். இதில் பெரிய உண்மை என்னவென்றால் அண்ணாவும், நெடுஞ்செழியனும்,  பேராசிரியரும் திமுகவை உருவாக்கியவர்கள். அவர்கள் பொது செயலாளராக இருந்திருக்கிறார்கள்.

நான் அந்த இயக்கத்தில் தொண்டனாக சேர்ந்து, அவ்வளவு பெரிய பதவிக்கு வந்திருப்பது, எனக்கு மகிழ்ச்சி மட்டுமல்ல, ஒரு அதிர்ச்சியும் இருக்கிறது. ஆக பயம் கலந்த மகிழ்ச்சி எனக்கு. எங்களது தலைவர் மு.க.ஸ்டாலினும் என்னை போலவே, இந்த இயக்கத்தில் தொண்டாற்றி உழைத்து, உழைத்து இன்றைக்கு தலைவராக வந்திருக்கிறார். எனவே, எங்கள் இயக்கத்துக்கு ஏற்படக்கூடிய எதுவுமே சவால் தான். அந்த சவாலை நானும் அவரும், திமுக முன்னணி தலைவர்களும், கலந்து பேசி நிச்சயம் அந்த சவால்களை எதிர்க்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

* நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘’திமுகவின் பொதுச்செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் நண்பர் துரைமுருகன், பொருளாளராக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கும் நண்பர் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்.

Related Stories: