ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை : தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை, : ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் சென்னை ரயில்ேவ கோட்டம் புதிய சாதனை படைத்துள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை ரயில்வே கோட்டம் கடந்த ஆகஸ்ட் மாதம் எப்போதுமில்லாத வகையில் ஆட்டோமொபைல் சரக்கு போக்குவரத்தில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் முதன்முறையாக புதிய வகை ரயில் பெட்டிகள் அமைப்பு கொண்ட சரக்கு ரயில் போக்குவரத்து சேவையை கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி வாலாஜாபாத் ரயில் நிலையத்திலிருந்து ஹரியானா மாநிலம், பரூக்நகர் ரயில் நிலையம் வரை தொடங்கியது.

இந்த புதிய வகை ரயில் பெட்டிகள் மூலம் கூடுதல் பெட்டிகளை ஏற்றி வந்தது. இதனால், கடந்த 2019ம் ஆண்டை விட தற்போது 58 சதவீதம் சரக்கு ரயில் போக்குவரத்து சேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் மொத்தம் 35 பெட்டிகளைக்கொண்ட சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளது. ஒரு சரக்கு ரயிலில் 27 பெட்டிகள் வீதம் ஒரு பெட்டியில் 11 அல்லது 12 கார்களை ஏற்றியுள்ளது. அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 10,000 கார்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2020 இயக்கப்பட்ட 35 சரக்கு ரயில்கள் மூலமாக சென்னை ரயில்வே கோட்டம் சுமார் 10.13 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. ஒரு சரக்கு ரயில் மூலமாக 29 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆகஸ்ட் 2019ல் 6.41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது. தற்போது இந்த புதிய வகை சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் ரயில்கள் இயக்கப்படுவதால் சரக்கு போக்குவரத்து வருவாயும் இரட்டிப்பாகியுள்ளது. சமீபத்தில் சென்னை ரயில்வே கோட்டம் உருவாக்கிய புதிய சரக்கு போக்குவரத்து மேம்பாட்டு குழு மூலமாக சரக்கு போக்குவரத்து அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: