இந்தியா - ஜப்பான் இடையே ஜவுளி துறை ஒத்துழைப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: இந்தியா, ஜப்பான் இடையே தரமான ஜவுளிகள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. ஜப்பான் நாட்டு சந்தைக்கு ஏற்றவாறு இந்திய ஜவுளிகள் மற்றும் ஆடைகளின் தரத்தை மேம்படுத்துவது மற்றும் பரிசோதிப்பதற்காக இந்தியாவின் ஜவுளிகள் ஆணையம் மற்றும் ஜப்பானின் நிசன்கென் தர மதிப்பீடு மையம் ஆகியவற்றுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இதனால் தொழில்நுட்பத் துறைக்கான ஜவுளிகள் மற்றும் துணி வகைகளை இந்தியாவில் பரிசோதிக்கும் பணிகளை நிசன்கென் தர மதிப்பீடு மையத்தின் சார்பாக ஜவுளிகள் ஆணையம் மேற்கொள்ளும். இதுபோலவே இந்திய நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் மற்றும் பின்லாந்து அரசின் நிலவியல் கணக்கெடுப்பு நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையே நிலவியல் மற்றும் கனிம வளங்கள் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நிலவியல் துறை, பயிற்சி, கனிம ஆய்வு, நில அதிர்வு மற்றும் நிலவியல் கணக்கெடுப்புகள் தொடர்பான பல்வேறு அம்சங்களில் இரு நிறுவனங்களுக்கும் இடையேயான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும், அறிவியல் இணைப்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

Related Stories: