கொடிய கொரோனா காலத்தில் ஐரோப்பிய நாடுகளில் பள்ளிகள் திறப்பு - இரண்டாம் கட்ட கொரோனா பரவல் குறித்து பெற்றோர் அச்சம்!

ஐரோப்பியா:  ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கிடையில், பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால், ஒவ்வொரு நாடும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன. இருப்பினும் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.58 கோடியாக அதிகரித்துள்ளது. இதில் 1.81 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 8,60,000ஆக அதிகரித்துள்ளது.  

மேலும் உலக அளவில் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு, சமூக இடைவெளி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. தொழிலகங்களும் மூடப்பட்டதால் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் குழந்தைக்கு கல்வியை புகட்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் கொரோனா தொற்றினால் மூடப்பட்டன. இதனால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானது. இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுகிடையில் ஐரோப்பாவில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

பிரான்ஸ் நாட்டில் நேற்று திறக்கப்பட்ட பள்ளிகளில் லட்சக்கணக்கான மாணவர் வருகை காணப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் வானில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதனையடுத்து பிரான்சில் 11 வயது நிரம்பிய மாணவர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகளுக்கிடையில் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில், கூட்டமாக உட்காரவைக்காமல், சிறு குழுவாக பிரித்து வகுப்புகள் எடுக்க ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

கிருமிநாசினியை பெற்றோரே குழந்தைகளுக்கு கொடுத்து அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதற்கிடையில் இத்தாலி, போஸ்னியா போன்ற நாடுகளிலும் பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன. வரலாற்றில் கல்வித்துறைக்கு கொரோனா வைரஸ் மிகப்பெரிய இடையூறு ஏற்படுத்திவிட்டதாக சுகாதார அமைப்பு அண்மையில் கருத்து தெரிவித்திருந்தது. இந்நிலையில், 2ம் கட்ட கொரோனா அச்சத்தில் உள்ள ஐரோப்பிய நாடுகள் குழந்தைகள் மூலம் தொற்று பரவி விடுமோ? என்ற பீதியில் உள்ளனர். இருப்பினும் குழந்தைகளின் கல்வி நிலையை மேன்படுத்த பள்ளிகள் திறக்கப்பட்டது சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

Related Stories: