சென்னையில் பல்வேறு சேவைகளுக்கான 118 புதிய வாகனங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்!!!

சென்னை:  பல்வேறு சேவைகளுக்கான 118 புதிய வாகன சேவைகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 118 அவசரக்கால ஊர்திகளை சென்னை தலைமை செயலகத்தில் சற்று முன்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்துள்ளார்.

இந்த நிகழ்ச்சியில், தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் பல மூத்த அமைச்சர்களும் பங்கேற்றனர். இந்நிலையில் குறிப்பாக கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் இவை தொடங்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸின் தாக்கம் தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனையடுத்து உயிர்கொல்லி வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு போர்க்கால அடிப்படையில் பலகட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் அடிப்படையில் தற்போது கொரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல 118 வாகனங்கள் தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே தமிழகத்தில், சுமார் 1005 அவசர ஊர்திகள் பயன்பாட்டில் உள்ளன. இதற்கிடையில் இந்த சேவைகளை மேலும் விரிவுபடுத்த தமிழநாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தின்  கீழ் 108 அவசரக்கால ஊர்திகள் சேவைகளுக்காக 103 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 500 அவசர ஊர்திகளை கொரோனா நோயாளிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தமிழக அரசு ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

 அதன் ஒருபகுதியாக, முதற்கட்டமாக தற்போது 118 அவசரக்கால ஊர்திகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு தொடங்கி வைத்துள்ளது. மேலும் இவற்றில் தமிழக அரசு சார்பில் 20 கோடியே 65 லட்சம் ரூபாயும், அதேபோல் தனியார் நிறுவனம் சார்பில் ஒரு கோடியே 26 லட்சம் மதிப்பீட்டிலும் இந்த வாகனங்கள் தற்போது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வாகனங்களை பொறுத்தவரையில், பி.எல்.எஸ் எனப்படும் அடிப்படை வசதி கொண்ட அவசரக்கால ஊர்திகள் மற்றும் ஏ.எல்.எஸ் எனப்படும் மேம்படுத்தப்பட்ட அவசரக்கால ஊர்திகள் என 2 வகைகளாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

நோயாளிகளின் நிலையை உடனடியாக கண்டறிய 60 மருத்துவ உபகரணங்களும் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இவற்றை கையாள அவசரகால மேலாண்மை தேர்ச்சிபெற்ற பணியாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த ஊர்திகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் இன்று முதல் பிரித்து அனுப்பப்பட உள்ளதாக சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் கொரோனா நோயாளிகளை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக அமையும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: