100 ஆண்டுக்கும் மேல் பழமையான பாரம்பரிய கட்டிடத்தின் இணைப்பு கட்டிடத்தை விதிகளை மீறி இடிக்க திட்டம்: பொறுப்பில்லாத பொதுப்பணித்துறை; தொல்லியல் துறை அனுமதி பெறவில்லை

சென்னை: பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர்களுக்கென ரூ.25 கோடியில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் இணைப்பு கட்டிடத்தை இடிக்க திட்டமிட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் கடந்த 1860ல் கட்டப்பட்ட கட்டிடத்தில் பொதுப்பணித்துறை தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தில் இடநெருக்கடி இருப்பதால், கல்சா மகாலில் பாரம்பரிய கட்டிடத்தின் கோட்ட அலுவலகம் மாற்றப்பட்டன.

மேலும், இடநெருக்கடி பிரச்னைக்கு தீர்வு காண பொதுப்பணித்துறை சார்பில் ரூ.33 கோடி செலவில் ஹூமாயூன் மகால் புனரமைக்கும் பணி நடந்து வருகிறது. கொதிகலன் இயக்க அலுவலகம் ரூ.5 கோடி செலவில் புனரமைப்புக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.25 கோடி செலவில் புதிதாக தலைமை பொறியாளர்களுக்கென அலுவலகம் புதிதாக கட்டப்படவிருக்கிறது. இதற்காக, அந்த வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் இணைப்பு கட்டிடமான தலைமை கட்டிட கலைஞர் அலுவலகத்தை இடிக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது.

பொதுவாக நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் 100 சதுர அடியில் புதிய கட்டிடம் கட்டப்படக்கூடாது என்ற விதி உள்ளது. அதை மீறி இணைப்பு கட்டிடத்தை இடிப்பதற்கு தற்போது பொதுப்பணித்துறை சார்பில் ஏலம் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நூற்றாண்டு பழமையான கட்டிடம் அருகே புதிதாக இணைப்பு கட்டிடம் கட்டுவதாக இருந்தால், இன்டாக் என்கிற பாரம்பரிய கட்டிட நிபுணர்கள் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும். அந்த குழுவினர் ஆய்வு செய்து அதன் பிறகு அந்த கட்டிடத்தை இடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து அந்த குழுவினர் முடிவு செய்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள். அதனடிப்படையில் தான் கட்டிடத்தை இடிப்பது குறித்து ஏலம் விட்டிருக்க வேண்டும். ஆனால், எந்த வித அனுமதியும் பெறாத சூழலில் விதிகளை மீறி நூற்றாண்டு பழமையான கட்டிடத்தின் இணைப்பு கட்டிடத்தை இடிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

Related Stories: