கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் கல்விக்கு செல்போன் வாங்க வசதியில்லை : அருப்புக்கோட்டையில் வருமானம் இன்றி தவிக்கும் குடும்பம்...!!!

விருதுநகர்:  கொரோனா ஊரடங்கால் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஆன்லைன் கல்வி வசதி இல்லாமல் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றிலுமாக புரட்டி போட்டுள்ளது.

இதனையடுத்து சிறார்களின் கல்வியையும் இந்த கொரோனா விட்டுவைக்கவில்லை. அதாவது விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை திருநகரம் பகுதியில், பொன்னுசாமிபுரம் தெருவில் வசிக்கும் முருகன் என்பவரின் குடும்பம் தற்போது கொரோனா ஊரடங்கால் கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் ஓட்டுனராக பணிபுரியும் முருகனுக்கு மனைவி மற்றும் 6 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் தற்போதுள்ள சூழலில் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் பிள்ளைகளின் கல்வியும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக முருகன் வேதனை தெரிவிக்கிறார். மேலும் கராத்தே கலையில் ஏராளமான பதக்கங்களை குவித்திருக்கும் மூத்த மகன் ஹரிஹரப்பிரசாத், ஆன்லைன் கல்விக்கு செல்போன் கூட இல்லாமல் தவித்து வருகிறான்.

 இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது. இதனையடுத்து அனைவரையும் கல்வி கற்க கூறும் அரசு, பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள குடும்பங்களை கண்டறிந்து உதவ வேண்டும் என்பது இவர்களது கோரிக்கையாக உள்ளது. மேலும் தங்களை போன்று படிக்க ஆர்வமுள்ள குழந்தைகளுக்கு தன்னார்வ அமைப்புகளும் உதவ முன்வர வேண்டும் எனவும் அந்த குழந்தைகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: