சரக்கு ரயில் தனிப் பாதை திட்டத்தில் முட்டுக்கட்டை 9 மாநில முதல்வர்களுக்கு ரயில்வே அதிரடி கடிதம்: பிரச்னைகளை தீர்த்து வைக்கும்படி கெடுபிடி

புதுடெல்லி: பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடம் அமைக்கும் பணியில் உள்ள இடர்பாடுகளை விரைவில் தீர்த்து வைக்கவும், இதனை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல், 9 மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். நாட்டில் சரக்கு போக்குவரத்தை விரைவாக கையாள்வதற்காக, ரயில்வேயில் சரக்கு ரயில்களின் பயணத்துக்காக தனி ரயில் பாதை அமைக்கப்படுகிறது. இப்பணிகளை 2021 டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருந்தது. பின்னர், கொரோனா பாதிப்பால் 6 மாதத்திற்கு 2022 ஜூன் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், பல்வேறு மாநிலங்களை கடந்து செல்லும் இந்த சிறப்பு வழித்தட பாதையில் ஏராளமான பிரச்னைகள் நிலவுகின்றன. நிலம் கையகப்படுத்துதல், நிலுவை வழக்குகள், கிராமத்தினரின் நிறைவேற்றப்படாத கோரிக்கை போன்ற விவகாரங்களால் சரக்கு ரயில் வழித்தடம் அமைக்கும் பணியில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளது. இந்த ரயில் பாதை அமைக்கப்படும் திட்டத்தில் பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அவருடைய உத்தரவின் பேரில், இந்த திட்டப் பணிகளை பிரதமர் அலுவலகம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இந்த பணிகள் மந்தமாக நடப்பது குறித்து மோடி கவலை தெரிவித்தார். இதையடுத்து, இப்பணிகளை துரிதப்படுத்தும் பணியில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் முழு கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.

இதன் முதல் கட்டமாக, குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், பஞ்சாப், மேற்கு வங்கம், அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில முதல்வர்களுக்கு பியூஸ் கோயல் கடிதம் எழுதி உள்ளார். அதில், பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடம் அமைக்கும் திட்டத்துக்கு முட்டுக்கட்டையாக உள்ள நிலம் கையகப்படுத்தும் பணிகள், விவசாயிகளின் கோரிக்கை உட்பட அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீர்வு காண வேண்டும் எனவும், இப்பணியை பிரதமர் மோடி உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரூ. 81,000 கோடியில் 10,300 கிமீ பாதை

* நாடு முழுவதும் ஆறு திசைகளையும் இணைக்கும் வகையில், 10,300 கிமீ தொலைவுக்கு, பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடம் அமைக்கப்படுகிறது.

* இத்திட்டப் பணிகள் ரூ.81,000 கோடியில் அமல்படுத்தப்படுகிறது.

* உத்தரப்பிரதேசத்தில் இருந்து மும்பை வரை இப்பாதை மேற்கு பிரத்யேக வழித்தடமாகவும், பஞ்சாப்பின் லூதியானா - மேற்கு வங்கத்தின் தன்குனி வரை கிழக்கு பிரத்யேக வழித்தடமாகவும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

Related Stories: