ஆவடி ராணுவ தளவாட விஞ்ஞானி கொல்லிமலை அடிவாரத்தில் மர்ம சாவு: சடலத்தை கைப்பற்றி போலீஸ் விசாரணை

சேந்தமங்கலம்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்தவர் உமா சங்கர்(54). இவர் சென்னை ஆவடியில் உள்ள இந்திய ராணுவ தளவாட மையத்தில் விஞ்ஞானியாக வேலை செய்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி(49) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் காட்டான்குளத்தூரில் உமாசங்கர் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம், தனது பெற்றோரை பார்க்க, தனியாக சேந்தமங்கலம் வந்துள்ளார். இந்நிலையில் உமாசங்கர் நேற்று காலை 8 மணியளவில், தனது டூவீலருக்கு பெட்ரோல் போட செல்வதாக, பெற்றோரிடம் கூறிவிட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை.

இந்நிலையில் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர், கொல்லிமலை அடிவாரம் சின்னபள்ளம்பாறை நட்டாற்று பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் கிடப்பதாக, சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார், நட்டாற்று பாலம் பகுதிக்கு விரைந்து சென்று, அங்கிருந்த சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தவர் விஞ்ஞானி உமா சங்கர் என்பது தெரியவந்தது. அவரது உடலை சேந்தமங்கலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசேதானைக்காக அனுப்பி வைத்தனர். நட்டாற்று பாலம் அருகே உள்ள மாமரத்து அடியில் அவரது டூவீலர் நிறுத்தப்பட்டிருந்தது. அவர் எதற்காக அங்கு சென்றார். எவ்வாறு இறந்தார் என்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவரும் என போலீசார் தெரிவித்தார்.

Related Stories: