கொரோனாவால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் கல்லூரி மாணவர்கள் இருந்ததால் ‘ஆல் பாஸ்’ என அறிவிக்கப்பட்டது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: கொரோனாவால் மாணவர்கள் கடும் மனக்குழப்பமாக இருந்ததால், கல்லூரி தேர்வுகளில் அனைவரும் ‘ஆல் பாஸ்’ என்று தமிழக அரசு அறிவித்தது என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள திரு.வி.க.நகர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய களப்பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கவுரவித்தார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமானவர்களை பாதுகாப்புடன் வீடு திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 44,20,697 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த கொரோனா காலக்கட்டத்தில் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த மாணவர்களுக்கு, மன உறுதியை ஏற்படுத்தி, தெளிவான பாதையை முதல்வர் ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார்.

கொரோனாவால் பல்வேறு மனக்குழப்பத்தில் மாணவர்கள் இருந்தனர். இந்த நிலையில் கல்லூரிகளில் தேர்வுக்கு கட்டணம் செலுத்திய மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் அறிவித்தார். நீதிமன்றம், பல்கலைக்கழகங்களின் வழிகாட்டுதலின்படியே இந்த அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார். இதனால் மாணவர்கள் மனதில் முதல்வர் நீங்காத இடத்தை பெற்று விட்டார். அதனால் நம்பிக்கை நாயகன், மாணவர்களின் விடிவெள்ளி என பல்வேறு பட்டங்களை மாணவர்கள் சமூக வலைதளங்கள், பொது வெளிகளில் முதல்வரை பாராட்டி வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

* மீண்டும் கொரோனா தொற்று அதிகரிப்பு

அமைச்சர் உதயகுமார் மேலும் கூறுகையில், திருவிக நகர் மண்டலத்தில் 7 சதவீதமாக கொரோனா தொற்று இருந்தது. இ-பாஸ் தளர்வால் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் வந்துள்ளதால், திருவிகநகரில் தற்போது 10 முதல் 12 சதவீதம் கொரானா தொற்றுஉயர்ந்துள்ளது. மருந்தே இல்லாத இந்த நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் தான் இ-பாஸ் நடைமுறை, ஊடரங்கு என பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனாவால் தமிழகத்தில் நீட் தேர்வு நடத்த முடியாது என மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம். ஆனால் நீட் தேர்வை கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது என்றார்.

Related Stories: