தூதரக பார்சலில் தங்கம் கடத்தல் கேரள அமைச்சரிடம் விரைவில் விசாரணை

திருவனந்தபுரம்: கேரளாவில் தங்கம் கடத்தல் ராணி சொப்னாவின் விவகாரம் பெரிதாகி வரும் நிலையில், துபாயில் இருந்து 32 பெட்டிகள் அடங்கிய பார்சலை கைமாற்றியது தொடர்பாக கேரள கல்வி அமைச்சர் ஜலீலிடம் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விரைவில் விசாரிக்க உள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகம் மூலமாக, வெளிநாடுகளில் இருந்து பல கோடி மதிப்புள்ள தங்கம் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, தங்க கடத்தல் ராணி சொப்னா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கேரள முதல்வர், கல்வி அமைச்சர் ஜலீல் உள்ளிட்டோரும் சந்தேக வட்டத்துக்குள் சிக்கி இருக்கின்றனர்.  

கடந்த ஜூன் 25ம் தேதி துபாயில் இருந்து ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு 32 பெட்டிகள் அடங்கிய பார்சல் வந்தது. இவை 2 வாகனங்களில் ஏற்றப்பட்டு திருவனந்தபுரத்தில் உள்ள உயர் கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.  பின்னர், 32 ெபட்டிகளும் உயர் கல்வித்துறை அமைச்சக வாகனங்களில் மலப்புரம் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டன. அமீரக தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட விவகாரம் வெளியே வந்த பின்னர் இது தொடர்பாக சுங்க இலாகா நடத்திய விசாரணையில் தான் இந்த தகவலும் தெரியவந்தது.

இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் ஜலீலிடம் கேட்டபோது, அந்த பார்சல்களில் புனித குரான் நூல்கள் இருந்ததாக கூறினார். ஆனால், குரான் வந்த பெட்டிகளில் அது மட்டுமல்லாமல் வேறு ஏதாவது ெபாருட்களும் இருந்திருக்கலாம் என சுங்க இலாகாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து பார்சலை பிரித்து பார்க்க சுங்க இலாகா தீர்மானித்தது. அதற்கு முன்னதாக குரானின் எடை பரிசோதிக்கப்பட்டது. இதில் ஒரு நூல் 576 கிராம் இருப்பது தெரிய வந்தது. மொத்தம் 250 பாக்கெட் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதன் மொத்த எடையை கணக்கிட்ட பின்னர் தூதரக பார்சலின் எடையை ஒப்பிட்டு பார்க்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் எடை அதிகமாக இருந்தால் அமைச்சர் ஜலீலுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. எடை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குரானுடன் வேறு ஏதாவது பொருள் வந்து இருக்கலாம் என்பது உறுதி செய்யப்படும். இது தொடர்பாக அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விரைவில் விசாரணை நடத்தும் என கூறப்படுகிறது.

Related Stories: