கோவையில் விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் பதிக்க கூடுதல் மதிப்பீடு அறிவித்ததற்கு விவசாயிகள் அதிருப்தி

கோவை:  கோவை மாவட்டத்தில் விளைநிலங்கள் வழியே எண்ணெய் குழாய் அமைக்க கூடுதல் மதிப்பீடு அறிவிக்கப்பட்டிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திருக்கிறது. கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனகொந்தி வரை பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் 310 கி.மீ தொலைவிற்கு எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.  அதாவது கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு அருகில் உள்ள தேவனகொந்தி பகுதியில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு தேவைப்படும் பெட்ரோலை கொண்டு செல்வதற்காக இந்த திட்டமானது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்கள் வழியாக குழாய்கள் அமைக்கப்பட உள்ளன.

இவை பெரும்பாலும் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்பட உள்ளதால் விவசாயிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திட்ட மதிப்பீட்டை 678 கோடி ரூபாயிலிருந்து 1472 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விளைநிலங்கள் வழியாக குழாய்கள் பதிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள நிலையில், திட்டத்திற்காக மதிப்பீட்டை உயர்த்திருப்பது, விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டம் அடுத்தாண்டு அக்டோபர் இறுதிக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் விவசாய நிலங்களுக்கு பதிலாக சாலையோரம் குழாய்களை பதிக்குமாறு கூறி வரும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பணிகளை செயல்படுத்த முடியாமல் பாரத் பெட்ரோலிய நிறுவனம் திணறி வரும் நிலையில், இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டு தொகையை இருமடங்காக உயர்த்தி அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது.

Related Stories: