சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு துணி பார்சல்களில் கடத்த முயன்ற ரூ.1.36 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: விமான நிலையத்தில் இருவர் கைது

சென்னை: சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்ப வந்திருந்த கூரியர் பார்சல்களை சென்னை விமான நிலைய சரக்கக சுங்கத்துறை அலுவலகத்தில் சுங்க அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், 5 பார்சல்களில் சிங்கப்பூரில் உள்ள ஒரே முகவரி இருந்தது. அந்த பார்சல்களில் புடவை, சர்ட், சுடிதார் போன்ற ஆடைகள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தன. சந்தேகத்தின் பேரில், அந்த பார்சல்களில் இருந்த சென்னை முகவரிகளில் விசாரித்தபோது, அந்த முகவரிகள் போலியானவை என்று தெரியவந்தன. இதையடுத்து பார்சல்களை பிரித்து சோதனையிட்டபோது, துணிகளுக்குள் வெளிநாடு மற்றும் இந்திய பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

அமெரிக்க டாலர், யூரோ, சிங்கப்பூர் டாலர், ரியால் உள்ளிட்ட வெளிநாட்டு பணம் ரூ.1.06 கோடியும், இந்திய பணம் ரூ.30 லட்சமும் (அனைத்தும் 2000 ரூபாய் நோட்டுகள்) மொத்தம் ரூ.1 கோடியே 36 லட்சம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மேலும், சுங்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த கூரியர் பார்சல்களை தனியார் கூரியர் அலுவலகத்திற்கு பதிவு செய்து அனுப்ப கொண்டு வந்தவர்கள், அவர்கள் வந்த வாகனங்களை ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்டுபிடித்து, சென்னையை சேர்ந்த 2 பேரை கைது செய்தனர். அவர்கள் புகைப்பட கலைஞர்கள் என்று தெரிகிறது. தொடர் விசாரணையில், இந்த பணம் ஹவாலா பணம் என்று தெரியவந்துள்ளது. எனவே, இந்த பணம் யாருடையது என்றும், கைது செய்யப்பட்டவர்களின் பின்னணியில் இருப்பது யார் என்றும் விசாரணை நடக்கிறது. இச்சம்பவம் சென்னை விமானநிலைய சரக்கக பகுதியில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: