மொஹரம் ஊரவலத்திற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு : மனு தள்ளுபடி

டெல்லி:  மொஹரம் ஊர்வலத்துக்கு அனுமதி கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நாடுமுழுவதும் மொஹரம் பண்டிகை இம்மாதம் 30ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து மொஹரம் பண்டிகை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கக்கோரி உத்திரப்பிரதேசத்தை சேர்ந்த செயது கல்பே ஜாவத் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்திருந்தார்.

அதில் நபிகள் நாயகம் முகமதுவின் பேரனான இமாம் ஹூசைன், இஸ்லாமிய கட்டளைகளை நிறைவேற்றும் பொருட்டு அவரின் இன்னுயிரை நீத்த தியாகத்தை போற்றும் விதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதனால் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், கொள்கைக்காக மடிந்த இமாம் மற்றும் அவரது குடும்பத்தினரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் மொஹரம் தினத்தன்று ஊர்வலங்களை நடத்துவது வழக்கம்.

இதனால் ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்குமாறு மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கானது தற்போது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி நாடுமுழுவதும் மொஹரம் பண்டிகை ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க முடியாது என்றார்.  ஏனெனில், அனுமதி வழங்கப்படும் நிலையில், கொரோனா தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து விநாயகர் சதுர்த்தி போன்ற விழாவிற்கும் ஊர்வலம் நடத்துதல், கடல் மற்றும் ஆற்றில் கரைத்தல் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதாவது கொரோனா பரவல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி கூறியுள்ளார். மேலும் தற்போது மொஹரம் பண்டிகை ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில், கொரோனா தொற்றும் அதிகரிக்கக்கூடும், அதனைத்தொடர்ந்து தேவையில்லாத குழப்பங்கள்  ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து திட்டவட்டமாக மொஹரம் பண்டிகை ஊர்வலத்துக்கு மறுப்பு தெரிவித்து, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Related Stories: