தேர்வு முக்கியமா, மாணவர்களின் உயிர் முக்கியமா?: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் திராவிடர் கழகம் அறவழி ஆர்ப்பாட்டம்.!!

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களில் திராவிட கழகம் சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அடையாறில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி இல்லம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் அன்புராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மட்டும் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, ஆள்மாறாட்டம், வினாத்தாள் குளறுபடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்வதே சரியான நடவடிக்கை என்றார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் தேர்வு முக்கியமா அல்லது மாணவர்களின் உயிர் முக்கியமா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் உடனடியாக அடுத்த சட்டமன்றத்திலேயே ஒரு அவசர தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். அதன் மூலமாக தங்களுடைய முடிவை எடுத்துரைக்கலாம்.

ஏனெனில் கல்வி என்பது தற்போது வரை ஒத்திசைவு பட்டியலில் கன்கரன்ட் லிஸ்டிலேயே உள்ளது. யூனியன் லிஸ்டிற்கு போகவில்லை. நீட் தேர்வு குறித்து முதுகெலும்போடு முதல்வர் நடந்துகொள்ள வேண்டும். மிக உறுதிப்பாடோடு தமிழக அரசு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே தற்போது அறவழி போராட்டம் நடத்தி வருகிறோம் என குறிப்பிட்டார்.

 சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அறவழி ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தின் துணை தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் நீட் தேர்வை திணிக்க கூடாது என்று வலியுறுத்தி ஈரோட்டில் சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பிலும், கரூரில் பேருந்து நிலையம் அருகேயும் திராவிட கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Related Stories: