அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவை: கோவை  அரசு மருத்துவமனையில் பராமரிக்கப்பட்டு வந்த  பச்சிளம் ஆண் குழந்தை காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தின் பின்புறம் சாலையோரம் கடந்த 21-ம் தேதி பிறந்து ஏழு நாட்களான பச்சிளம் ஆண்  குழந்தை அனாதையாக கிடந்தது. குழந்தையின் அழுகை சத்தம்  கேட்டு அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், மாவட்ட குழந்தைகள் நல அமைப்பு மற்றும் சரவணம்பட்டி  போலீசார் குழந்தையை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் குழந்தைகள் நல தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளித்தனர். மீட்கப்பட்ட போது அந்த குழந்தையின் எடை 1 கிலோ  900   கிராம் என்ற அளவில் இருந்தது. குறைந்த எடையில் இருந்ததால் அந்த குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும், தாய்ப்பால் வங்கியில் இருந்து பெறப்பட்டு  குழந்தைக்கு தாய்ப்பால் அளிக்கப்பட்டது.

இதனால், குழந்தையின் உடல்நிலை சீரானது. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையின் பாதுகாப்பு,பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு பணி மேற்கொள்ளும்  வகையில் காப்பகத்தில் ஒப்படைக்க முடிவுவானது.அதன்படி, ஆண் குழந்தையை நேற்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு அலுவலர்களிடம்  கோவை அரசு மருத்துவமனையின் டீன் காளிதாஸ் வழங்கினார். அப்போது அரசு மருத்துவமனையில் இருப்பிட மருத்துவ அதிகாரி (பொறுப்பு)  பொன்முடிச்செல்வன், உதவி இருப்பிட மருத்துவ அதிகாரிகள் மணிவண்ணன், மணிகண்டன் உள்பட பலர் இருந்தனர்.  பின்னர், கோவை மாவட்ட  குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் அந்த குழந்தையை சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தைகள் காப்பக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: