ராணுவ போர் பயிற்சியை நோட்டமிட சீன எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்க உளவு விமானம்: வெளிப்படையான சீண்டல் என ஆவேசம்

பீஜிங்: அமெரிக்காவின் உளவு விமானம் தனது ராணுவ எல்லைக்குள் ஊடுருவியதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. சீனாவின் வடக்கு எல்லைப் பகுதியில் அந்நாட்டு ராணுவத்தினர் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், இப்பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில்தான் அமெரிக்க விமானப்படையின் யு-2 உளவு விமானம் பறந்து உளவு பார்த்ததாக சீனா குற்றம் சாட்டியுள்ளது. இது பற்றி சீனாவின் ராணுவ பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சீன எல்லைக்குள் அமெரிக்காவின் உளவு விமானம் பறந்தது. மிகவும் மோசமான தலையீடாகும்.  சீனா பற்றிய தவறான புரிதலே இதற்குக் காரணம். சீன ராணுவத்தினர் வழக்கமான பயிற்சிகளை மேற்கொள்ளும் இடத்தில், அமெரிக்கா கண்காணிக்க வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை.

இதன் மூலம், எங்களை அமெரிக்கா வெளிப்படையாக சீண்டிப் பார்த்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை அமெரிக்கா இனிமேல் தவிர்க்க வேண்டும்,’ என்று கூறியுள்ளது. ஆனால், அமெரிக்க உளவு விமானம் எப்போது, எந்த இடத்தில் பறந்தது என்ற தகவலை சீனா வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்தியா - சீனா இடையே எல்லையில் ராணுவ ரீதியான மோதல் நீடிக்கிறது. இதுபோன்ற நிலையில், சீனாவின் ராணுவ நடமாட்டத்தை தென் சீன கடல் பகுதியில் மட்டுமின்றி, அனைத்து பகுதிகளிலும் அமெரிக்க ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

* உலகளவில் சீனா ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பதால், அந்நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் கடந்த சில ஆண்டுகளாக மோதல் அதிகமாகி வருகிறது.

* வர்த்தக போரில் தொடங்கிய இந்த மோதல், இப்போது ராணுவம் வரை வந்துள்ளது. குறிப்பாக, இந்திய எல்லையில் சீனா வாலாட்டியதால் அமெரிக்கா கோபம் அடைந்துள்ளது.

* வர்த்தகம், தொழில்நுட்பம், தைவான் பிரச்னை, சீனாவின் தென் கடல் பகுதி பிரச்னை என பல காரணங்களால் இந்த மோதல் தீவிரமாகி வருகிறது.

* சீனாவில் உருவான கொரோனா வைரசால் உலகளவில் அமெரிக்காதான் அதிகமாக பாதித்துள்ளது. அமெரிக்காவின் கோபத்துக்கு இதுவும் முக்கிய காரணமாகும்.

* சீன தூதர் வருத்தம்

டெல்லியில் இந்திய-சீனா இளைஞர்களுக்கான கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங், காணொலி மூலமாக கலந்து கொண்டு பேசுகையில், ‘‘சமீபத்தில் எல்லையில் இந்தியாவும், சீனாவும் விரும்பாத, துரதிருஷ்டவசமான சம்பவம் நடந்தது. இந்த பிரச்னையை தீர்க்க, முயற்சி செய்து வருகிறோம். இது, வரலாற்றில் மிகச் சிறிய நிகழ்வாகும். 70 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்திய-சீன உறவில், பல்வேறு சோதனைகள் ஏற்பட்டுள்ளன. இருநாடுகளும் பல ஆண்டுகளாக மிகப்பெரிய வர்த்தக கூட்டாளிகளாக இருந்து வருகின்றன. இதை வலுக்கட்டாயமாக பிரிப்பதை விட, காந்தத்தை போன்று இருநாடுகளும் ஈர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்,’’ என்றார்.

Related Stories: