அழிவு பாதையில் சென்னை நன்மங்கலம் ஏரி!: இறைச்சி, கழிவுநீர் கலக்கும் அவலம்..முக்கிய நிலத்தடி நீராதாரத்தை காக்குமா தமிழக அரசு?

சென்னை: சென்னை புறநகரின் முக்கிய நிலத்தடி நீராதாரங்களில் ஒன்றான நன்மங்கலம் ஏரி கழிவுநீர் குட்டையாக மாறிவருகிறது. குடியிருப்பு கழிவுநீரோடு இறைச்சி கழிவுகள், கட்டிட கழிவுகளும் கொட்டுமிடமாக ஏரி மாற்றப்பட்டிருப்பது இதற்கு காரணம். குடிநீர் ஆதாரங்களை காக்க வேண்டிய தமிழக அரசோ இதனை கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மேடவாக்கத்தை அடுத்த நன்மங்கலம் ஊராட்சியில் சுமார் 230 ஏக்கரில் நன்மங்கலம் ஏரி பறந்து விரிந்து காட்சியளிக்கிறது. நன்மங்கலத்தை ஒட்டியுள்ள காப்புக்காடுகள் மற்றும் மலைப்பகுதியில் இருந்து பெருக்கெடுத்து வரும் மழைநீரை தேக்கிக்கொண்டு நன்மங்கலத்தை சுற்றியுள்ள பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நீராதாரமாக விளங்கியது இந்த ஏரி.

காலப்போக்கில் அசுர வளர்ச்சி கண்ட சென்னையில் பெருகிவிட்ட ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் இருந்து நன்மங்கலம் ஏரியும் தப்பவில்லை. இதன் எதிரொலியாக எழுப்பப்பட்ட பெரிய பெரிய கட்டிடங்களால் பறந்து விரிந்த ஏரியின் பரப்பளவு கணிசமாக சுருங்கிவிட்டது தனி கதை. இதனை கண்டுகொள்ளாத அதிகாரிகள் தற்போது எஞ்சியிருக்கும் ஏரியையும் கழிவுநீர் குட்டையாக மாற்றப்படுவதை தடுக்கவில்லை என்பது நீர்நிலை ஆர்வலர்களின் மனக்குமுறலாக உள்ளது. விளைநிலங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு வீட்டு மனைகளாக மாற்றப்பட்டாலும் விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கிய நன்மங்கலம் ஏரியோ தனது நீர்சேவையை குடியிருப்புகள் பக்கம் திருப்பியது.

செம்பாக்கம், திருமலைநகர், அஸ்தினாபுரம், ஜமின் ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளுக்கு நிலத்தடி நீராதாரத்தை வலுப்படுத்த இன்றளவும் துணை நிற்கிறது நன்மங்கலம் ஏரி. மறுபுறம், கைகொடுக்கும் ஏரியை துத்சமென நினைப்பவர்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை நேரடியாக நன்மங்கலம் ஏரியில் கலக்கவிடுகிறார்கள். குடியிருப்பு கழிவுகளோடு செம்பாக்கம், பல்லாவரம் நகராட்சி பகுதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து கோழி, ஆடு கழிவுகளும், கட்டிட கழிவுகளும் தங்கு தடையின்றி நன்மங்கலம் ஏரியில் கொட்டப்படுகிறது. அதோடு இரவு நேரங்களில் பல இடங்களில் இருந்து கொண்டுவரப்படும் குப்பைகளும் ஏரி கரைகளில் கொட்டப்படுகின்றன. ஏரியில் கழிவுகள் கலக்கப்படுவதை நன்மங்கலத்தை சுற்றியுள்ள நகராட்சி நிர்வாகங்களும் கண்டுகொள்ளவில்லை.

நன்மங்கலம் ஏரியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொதுப்பணித்துறையும் அதனை பாதுகாக்க முன்வரவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தலைநகர் சென்னையில் கோடை காலங்களில் தலைவிரித்தாடும் குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது தமிழக அரசு. இந்த சூழ்நிலையில் புறநகரங்களில் இரண்டு நகராட்சிகளில் முக்கிய நிலத்தடி நீராதாரமாக விளங்கும் ஏரி கண்முன்னே பாழாக்கப்பட்டு வருகிறது. இதனை தடுத்தாலே பல ஆயிரக்கணக்கான மக்களின் குடிநீர் தேவையை உறுதி செய்ய முடியும் என்ற கருத்தையும் கவனத்தில் கொள்ளுமா அரசு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Stories: