மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16-ஆக அதிகரிப்பு - 3வது நாளாக மீட்பு பணி தீவிரம்

ராய்காட்:  மகாராஷ்டிரா மாநில ராய்காட் மாவட்டம் மஹாத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 14 பேரை காணவில்லை. இந்நிலையில் 20 மணி நேரத்திற்கு பின் இடிபாடுகளிலிருந்து 6 வயது சிறுவன் உயிரிருடன் மீட்கப்பட்டுள்ளான். மகாராஷ்டிரா மாநிலம், ராய்கட் மாவட்டம், மகாத் தாலுகாவில் உள்ள கஜல்புரா பகுதியில் நேற்று முன்தினம் தாரேக் கார்டன் என்ற 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துள்ளானது. இந்த இடிபாடுகளில் சுமார் 30 பேர் சிக்கி இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இடிபாடுகளிலிருந்து 6 வயது சிறுவனை மீட்பு குழுவினர் மீட்டனர்.

அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் சிறுவனின் தாய் நௌசின் நதீம் பங்கி இடிபாடுகளிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். மேலும் சிறுவனின் அக்கா ஆயிஷா, தங்கை ருகாயி ஆகியோரும் பிணமாக கண்டெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து கட்டிட இடிபாடுகளிலிருந்து இதுவரை 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆண்கள், 9 பெண்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அங்கு 3வது நாளாக தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் கட்டிடத்தின் கட்டுமான அதிபர் ஒப்பந்ததாரர், வடிவமைப்பாளர், பொறியாளர் உள்ளிட்ட 5 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து மராட்டிய காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: