இந்தியாவும் சீனாவும், அமைதியான உறவை பேண வேண்டும், மோதல்களை தவிர்க்க வேண்டும்: சீனத் தூதர் சன் வெய்டாங்

புதுடெல்லி: இந்தியாவும் சீனாவும், அமைதியான உறவை பேண வேண்டும் என சீனத் தூதர் சன் வெய்டாங் கூறியுள்ளார். லடாக் எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் தாக்கப்பட்டத்தில் இருந்து இந்தியா - சீனா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஏ.சி. பகுதியில் இருந்து சீனா ராணுவம் முற்றிலும் நகர்ந்து செல்ல வேண்டும் என இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.  ஆனால், லடாக் பகுதியில் மட்டும் பின் வாங்கிய சீன ராணுவம் மற்ற இடங்களில் இருந்து நகர தயக்கம் காட்டுகிறது. இதனால் பொருளாதாரம் மற்றும் ராணுவ அளவில் சீனாவுக்கு இந்தியா நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்திய பாதுகாப்புப்படை தளபதி பிபின் ராவத் சில தினங்களுக்கு முன், பேச்சுவார்த்தை தோல்வி என்றால், ராணுவ நடவடிக்கைக்கு தயாராக உள்ளது என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கு மோதல் சம்பவம் துரதிருஷ்டவசமானது என்றும், இருநாட்டு வரலாற்றில் இதுவொரு சின்ன நிகழ்வுதான் என்றும் இந்தியாவுக்கான சீனத் தூதர் சன் வெய்டாங் வருத்தம் தெரிவிக்கும் தொனியில் பேசியுள்ளார்.  டெல்லியில் நடைபெற்ற இந்திய- சீனா இளைஞர்கள் காணொலி கருத்தரங்கில் நிகழ்ச்சியில் பேசிய அவர், எல்லை பகுதிகளில் நேரிட்ட பதற்றத்தை சரி செய்யும் முயற்சியில் இருநாடுகளும் ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிட்டார். இந்தியாவை எதிரியாகவோ அச்சுறுத்தலாகவோ சீனா பார்க்கவில்லை என்றும், கூட்டாளியாகவே கருதுகிறது என்றும் வெய்டாங் கூறினார். இந்தியாவும் சீனாவும், அமைதியான உறவை பேண வேண்டும், மோதல்களை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். கல்வான் மோதல் சம்பவத்தால் இருநாடுகளிடையே பதற்றம் நிலவும் நிலையில் வெய்டாங்கின் கருத்து முக்கியமானதாக கருதப்படுகிறது.

Related Stories: