அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் முந்துகிறார்!: தனியார் அமைப்பு நடத்திய கருத்து கணிப்பில் தகவல்..!!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் 70 நாட்களே இருக்கும் நிலையில், வெளியாகி வரும் தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றன. அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டிரம்ப்பும், ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் ஜோ பிடனை அதிபர் வேட்பாளராக ஜனநாயக கட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதேபோல் டொனால்ட் டிரம்ப் அதிபர் வேட்பாளராகவும், துணை அதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் பெயர்களை குடியரசு கட்சி தலைவர் ரோஜோவ் மெக்டேனியல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இருதரப்புகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் டொனால்ட் டிரம்ப்பை விட, ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக கருத்து கணிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த real clear politics என்ற அமைப்பு நடத்திய கருத்து கணிப்பு குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை விட  ஜோ பிடனுக்கு 10 விழுக்காடு அதிக ஆதரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 26ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் வெளியான புள்ளி விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில் தற்போதைய நிலவரப்படி ஜோ பிடன் 52 விழுக்காடு, டிரம்புக்கு 42 விழுக்காடு ஆதரவு கிடைத்துள்ளது. ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசு கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதையடுத்து பிரச்சார உத்திகளில் அதிரடி மாற்றம் செய்யவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

Related Stories: