40 வீரர்கள் கொல்லப்பட்ட புல்வாமா தீவிரவாத தாக்குதல் 13,500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்: மசூத் அசார் உட்பட 19 பேர் மீது குற்றச்சாட்டு

ஜம்மு: புல்வாமா தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தேசிய புலனாய்வு அமைப்பு, சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் உட்பட 19 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லெத்போரா என்ற இடத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது தீவிரவாதிகள் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் பலியாகினர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. சிஆர்பிஎப் வீரர்களை நோட்டமிட்டு, திட்டமிட்டு நடத்தப்பட்ட இந்த தீவிரவாத தாக்குதல் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. அதோடு, ஆரம்ப கட்டத்தில் எந்த துப்பும் கிடைக்காமல் இருந்தது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. என்ஐஏ இணை இயக்குநர் அனில் சுக்லா தலைமையில் நடந்த விசாரணையில், மனித வெடிகுண்டாக வந்தவன், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்பது தெரியவந்தது. இந்த பயங்கர சதிக்கு பின்னால் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் இருப்பதும் கண்டறியப்பட்டது. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, செல்போன், பிடிபட்ட சில தீவிரவாதிகளை விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில், புல்வாமா தாக்குதல் தொடர்பாக என்ஐஏ, சிறப்பு நீதிமன்றத்தில் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை நேற்று தாக்கல் செய்தது.

இதில், சதித்திட்டம் தீட்டியவர்கள், அதனை செயல்படுத்தியவர்கள், சதிக்கு உதவியவர்கள் என 19 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

* மனித வெடிகுண்டாக வந்தவன் ஆதில் தர். இவன் 200 கிலோ வெடிபொருளை வாகனத்தில் வைத்து எடுத்து வந்து, சிஆர்பிஎப் வாகனம் மீது மோதி தாக்குதல் நடத்தி உள்ளான்.

* இதில் 20 கிலோ ஆர்டிஎக்ஸ் வெடிபொருள் பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்டுள்ளது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளனர். அவர்கள் வரும்போதே துப்பாக்கி, வெடிபொருட்களை கொண்டு வந்துள்ளனர். சில வெடி பொருட்களை காஷ்மீரிலேயே வாங்கி உள்ளனர்.

* இந்த சதியில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் சம்மந்தப்பட்டுள்ளான்.

* என்ஐஏ 7 பேரை கைது செய்துள்ளது. பல்வேறு என்கவுன்டர்களில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் தப்பி ஓடியுள்ளனர். அதில் 2 பேர் ஜம்மு காஷ்மீரில் பதுங்கியுள்ளனர் என குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* மசூத் அசாரின் 2 உறவினர்களான அப்துல்லா ராப் மற்றும் அமார் அல்வி முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

* கடந்த மார்ச் மாதம் என்கவுன்டரில் கொல்லப்பட்ட உமர் பரூக்கும் முக்கிய குற்றவாளிகளில் ஒருவன். இவன் கடந்த 2018ல் எல்லை வழியாக ஊடுருவியுள்ளான். இவன்தான் குண்டு தயாரித்தல், சதிக்கான ஆட்களை ஒருங்கிணைத்தல், சிஆர்பிஎப் வீரர்களின் நடவடிக்கையை கண்காணித்தல் போன்ற வேலைகளை செய்துள்ளான். இவனுக்கு உள்ளூரை சேர்ந்த சிலர் உதவியுள்ளனர். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குற்றவாளிகள் மீதான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்பதில் என்ஐஏ தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

* ஆன்லைனில் பொருட்கள்

என்ஐஏ குற்றப்பத்திரிகையில், தீவிரவாதிகள் சில பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. சில உயர்தர பேட்டரிகள், செல்போன் மற்றும் குண்டு தயாரிக்க தேவையான சில ரசாயனங்கள் ஆகியவற்றை ஆன்லைன் ஷாப்பிங் வலைதளங்கள் மூலமாக வாங்கி இருக்கின்றனர்.

Related Stories: