புல்வாமா தாக்குதல் வழக்கு....: ஜம்மு நீதிமன்றத்தில் 13,500 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது என்ஐஏ!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் புல்வாமாவில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் குறித்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெட்போரா என்ற இடத்தில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்தத் தாக்‍குதல் சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பு, விசாரணை நடத்தி வருகிறது. மிக அதிக இராணுவ பாதுகாப்பு கொண்ட ஜம்மு ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பல்வேறு கேள்விகள் இன்றளவும் எழுப்பப்பட்டு வருகின்றன. இதனையடுத்து புல்வாமா தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

தாக்‍குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த அப்துல் ரஷீத் காசி என்ற கம்ரான் மற்றும் ஹிலால் அகமது ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிலால் அகமது தாக்‍குதலின்போது சுட்டுக்‍கொல்லப்பட்டார். இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக 13,500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை என்ஐஏ தாக்கல் செய்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் ஜெய்ஷே முகம்மது தீவிரவாதிகளான மசூத் அசார், அவனது சகோதரன் அப்துல் ரவூப் அஷ்கர், கொல்லப்பட்ட தீவிரவாதி முகம்மது உமர் பாரூக், தற்கொலை வெடிகுண்டாக மாறிய ஆதில் அகமது தார் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இயங்கும் பல முக்கிய தீவிரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதல் தொடர்பாக என்ஐஏவால் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு பேரின் பெயர்களும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

Related Stories: