தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவுபெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

சென்னை: தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் செப்டம்பர் இறுதிக்குள் நிறைவுபெற்று அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கீழடி, மணலூர், கொந்தகை, அகரம் மற்றும் ஈரோடு மாவட்டம் கொடுமணல், தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர், சிவகளை என 7 இடங்களில் அகழாய்வு நடைபெறுகிறது. இவை தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் இதற்கான அதிக ஊக்கத்தை அளித்துள்ளார். 7 இடங்களில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு வரும் செப்டம்பரில் நிறைவு பெறும். தமிழகத்தில் இந்திய தொல்லியல் துறை 160 இடங்களிலும், தமிழக தொல்லியல் துறை 76 இடங்களிலும் அகழாய்வுகளை நடத்தியுள்ளது.

இரண்டு கள ஆய்வுகள் தற்போது நடைபெறுகின்றன. தாமிரபரணி ஆற்றங்கரையில் நெல்லை, தூத்துக்குடி பகுதிகளில் தொல்லியல் சார்ந்த இடங்களை கண்டறியும் பணி நடைபெறுகிறது. 7 விதமான தொழில்நுட்பங்கள் இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அகழாய்வுகள் நடைபெறும் 7 இடங்களில் 3,599 தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். கீழடி ஆய்வில், வாழ்விடங்கள், ஈமக்காடுகள், தொழில்கூடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக க, ய என்ற தமிழி(தமிழ்-பிராமி) எழுத்துகள் செவ்வண்ண பூச்சு பெற்ற மண்பாண்ட ஓடுகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சூது பவளம், மணிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இவை எங்கிருந்து வந்திருக்கும் என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.

சுடுமண்ணால் ஆன முத்திரை, எடை கற்கள், அலுமினியம் கலந்த செங்கல் கட்டுமானங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அகரத்தில் நுண்கற்காலத்தை சேர்ந்த மெல் அலகு கத்திகள், வழவழப்பான கல் மழுக்கள், சிறிய கோடுகள் மற்றும் புள்ளிகளுடன் கூடிய தங்க நாணயங்கள், சீன மண்பாண்டத்தின் விளிம்பு பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆதிச்சநல்லூரில் முதுமக்கள் தாழிகள், மேற்கூரை ஓடுகள், கிண்ணங்கள் உள்ளிட்டவை எடுக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் காசுகள், கல்பந்துகள், சுடுமணல் ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. கற்களால் ஆன ஆயுதங்கள் கிடைத்துள்ளதை பார்க்கும்போது, தமிழனின் வரலாறு 3,75,000 ஆண்டுகளுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கூறப்படுகிறது, என தெரிவித்துள்ளார்.

Related Stories: