தொழில்களை பாதுகாக்க வலியுறுத்தி 10,000 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம்: கே.பாலகிருஷ்ணன் அறிவிப்பு

சென்னை: கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களையும், தொழில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி ஒருவார காலம் மக்கள் சந்திப்பும் ஆகஸ்ட் 25,26 ஆகிய தேதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: அனைத்து குடும்பத்தினருக்கும் அடுத்த ஆறுமாத காலத்திற்கு மாதம்தோறும் மத்திய அரசு ரூ.7,500, மாநில அரசு ரூ.5,000 என ரூ.12,500 ரொக்கமாக வழங்கிட வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா நோய் பரவாமல் தடுத்திட சோதனைகளை அதிகப்படுத்திட வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவமனைகளில் சேர்த்து முறையான சிகிச்சை வழங்கிட வேண்டும், தமிழகம் முழுவதும் மருத்துவ கட்டமைப்புகளை மேலும் அதிகரிப்பதோடு தமிழக அரசு தனியார் மருத்துவமனைகளையும் கொரோனா வார்டுகளாக கையகப்படுத்தி பயன்படுத்திட வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் 25% ஏழைகளுக்கு கொரோனா இலவச சிகிச்சையும் மற்றவர்களுக்கு குறைவான கட்டண விகிதங்களையும் தீர்மானித்து அமல்படுத்திட வேண்டும். வங்கி கடனுக்கான இ.எம்.ஐ., மற்றும் சுய உதவிக்குழுக்களின் கடன்கள் உள்ளிட்ட அனைத்து கடன் வசூலையும் ஓராண்டுக்கு ஒத்திவைப்பதுடன், இக்காலத்திற்கான வட்டியையும் ரத்து செய்ய வேண்டும்.  

2 மாதங்களுக்கு ஒரு முறை மின் கணக்கீடு என்பதை மாற்றி, மாதா மாதம் மின் கணக்கீடு செய்து மின் கட்டணம் வசூலிக்க வேண்டும். கொரோனா மற்றும் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து தரப்பு மக்களையும், தொழில்களையும் பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் நாடு தழுவிய கிளர்ச்சி இயக்கத்தின் பகுதியாக, தமிழகத்தில் ஒருவார காலம் மக்கள் சந்திப்பும் ஆகஸ்ட் 25,26 ஆகிய தேதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களையும் நடத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: