ஆக்ஸ்போர்ட் பல்கலை. கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி உடனே விற்பனை தகவலுக்கு சீரம் நிறுவனம் மறுப்பு..!!

புனே: ஆக்ஸ்போர்ட் பல்கலை. கண்டுபிடித்திருக்கும் கொரோனா வைரஸ் தடுப்பூசி இந்தியாவில் உடனே  விற்பனைக்கு வரவிருப்பதாக வெளியான தகவலை சீரம் நிறுவனம் மறுத்துள்ளது. பிரிட்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் ஆஸ்டர்செனெகா என்ற நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ள தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மராட்டிய மாநிலம் புனே நகரத்தில் உள்ள சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.  முதல் கட்டமாக 10 மில்லியன் மருந்துகளை தயாரிக்க இவர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

இந்த கொரோனா தடுப்பு மருந்தின் கடைசிகட்ட சோதனைகள் நடந்து வரும் நிலையில், நடப்பு ஆண்டின் இறுதியில் கோவிட் தடுப்பு மருந்து இந்தியாவில் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து, இன்னும் 73 நாட்களில் மக்களுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வரும். மக்கள் இதை பயன்படுத்துவார்கள் என்று செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதனை சீரம் நிறுவனம் மறுத்துள்ளது. அதில், நாங்கள் 73 நாட்களில் மருந்தை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் எண்ணத்தில் இல்லை. இந்த செய்தி பொய்யானது. முழுக்க தவறான செய்தியை யாரோ பரப்பி வருகிறார்கள். மக்களிடம் விற்பனை செய்ய நாங்கள் அனுமதி பெறவில்லை.

கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து எதிர்கால தேவைகளுக்கு இருப்பு வைக்க மட்டுமே அரசு அனுமதி அளித்திருப்பதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. தடுப்பு மருந்தின் கடைசி கட்ட சோதனை முடிவுக்கு பிறகே தடுப்பு மருந்து விற்பனை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது.

Related Stories: