முகநூல் நிறுவனத்துக்கு நாடாளுமன்ற நிலை குழு சம்மன்!: வெறுப்பூட்டும் கருத்துக்களை அகற்றுவதில் பாரபட்சம் என்று குற்றச்சாட்டு..!!

டெல்லி: வெறுப்பூட்டும் கருத்துக்களை அகற்றுவதில் முகநூல் நிறுவனம் பாரபட்சம் காட்டுவதாக எழுந்த புகாரை அடுத்து, அந்த நிறுவனத்திற்கு தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற நிலை குழு சம்மன் அனுப்பியுள்ளது. இதுகுறித்து மக்களவை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முகநூல் நிறுவனத்தின் பிரதிநிதிகள் செப்டம்பர் 2ம் தேதி நாடாளுமன்ற நிலை குழு முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ள அக்கூட்டத்தில், சமூக ஊடகங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பது தொடர்பாக விவாதிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

 இணையவழியில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, குடுமக்களின் உரிமைகளை பாதுகாப்பது ஆகியவை அப்போது ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஊடக நெறிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் செப்டம்பர் 1ம் தேதி நடைபெறவுள்ளது. அதில் மத்திய உள்துறை, தொலை தொடர்பு துறை, தகவல் ஒளிபரப்பு துறை ஆகிய அமைச்சகங்களின் பிரதிநிதிகள் டெல்லி, பீகார், ஜம்மு காஷ்மீர் மாநில அரசுகளின் அதிகாரிகள், பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா, பிரஸ் ஆர் பாரதி, செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 தகவல் தொழில்நுட்பம் தொடர்பான நாடாளுமன்ற குழு தலைவராக காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் உள்ளார். குழு தலைவர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று பாஜக எம்.பி.யும், குழுவின் மூத்த உறுப்பினருமான நிஷிகாந்த் துபே மக்களவை தலைவர் ஓம் பிர்லாவுக்கு நேற்று கடிதம் எழுதினார். இந்த சூழ்நிலையில் முகநூல் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: