பீகாரில் தேர்தல் ஆட்டம் ஆரம்பம் ராஷ்டிரிய ஜனதா எம்எல்ஏ.க்கள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு தாவல்: 4 நாட்களில் லாலு சம்பந்தி உட்பட 6 பேர் ஓட்டம்

பாட்னா: பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா எம்எல்ஏ.க்கள் மூவர் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் நேற்று இணைந்தனர். பீகார் சட்டப்பேரவையின் பதவி காலம் நவம்பர் 29ம் தேதியுடன் முடிகிறது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள நிலையிலும், இங்கு அக்டோபர் அல்லது நவம்பரில் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.

இங்கு லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) முக்கிய எதிர்க்கட்சியாக உள்ளது.

இக்கட்சியை சேர்ந்த 3 எம்எல்ஏ.க்கள் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் கடந்த 16ம் தேதி தற்காலிகமாக நீக்கப்பட்டனர். பின்னர், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் (ஜேடியு) கடந்த 17ம் தேதி அவர்கள் இணைந்தனர். இந்நிலையில், ஆர்ஜேடி.யில் இருந்து லாலுவின் சம்பந்தி சந்திரிகா ராய் உள்பட மேலும் 3 எம்எல்ஏ.க்கள் நிதிஷ் கட்சிக்கு நேற்று தாவினர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், 4 நாட்களில் ஆர்ஜேடி.யை சேர்ந்த 6 எம்எல்ஏ.க்கள் ஜேடியு.வில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.

* லாலு மருமகள் போட்டி?

லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவின் மனைவி ஐஸ்வர்யாவின் தந்தைதான் சந்திரிகா ராய். தேஜ் பிரதாப் தனது மனைவியை திருமணம் செய்த 6 மாதத்தில் வீட்டை விட்டு விரட்டி விட்டார். சந்திரிகா ராய் கூறுகையில், ``தேர்தலில் எனது மகள் போட்டியிட வாய்ப்புள்ளது. ஆனால், யாரை எதிர்த்து அவர் போட்டியிடுவார் என்பதை தற்போது கூற இயலாது. அதே நேரம், லாலுவின் 2 மகன்களுக்கும் பாதுகாப்பான தொகுதி எதுவும் இருக்காது,’’ என்றார்.

* மன்ஜி திடீர் விலகல்

‘ஆர்ஜேடி - காங். மெகா கூட்டணியில், கூட்டணி தலைவர்களின் கருத்தை யாரும் மதிப்பதில்லை,’என்று அதில் இடம் பெற்றுள்ள இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவர் ஜித்தன் ராம் மன்ஜி குற்றம் சாட்டினார். இது குறித்து விசாரிக்க ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்படும் என்று ராகுல் கூறியிருந்தார். ஆனால், கூட்டணியில் இருந்து மன்ஜி நேற்று திடீரென விலகினார். அவர் பாஜ கூட்டணியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: