இந்தியாவில் மத்திய அரசு பரிந்துரை செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கிறோம்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல்...!!!

டெல்லி: இந்தியாவில் மத்திய அரசு பரிந்துரை செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கிறோம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்து உள்ளது. மத்திய அரசு முடிவுக்கு வந்தால் கொரோனா தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளிக்க தயாராக இருக்கிறோம் என்று ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்க்கவா நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை 5 மாதங்களுக்கும் மேலாக முடங்கியுள்ளது. இதுவரையில், பொதுப் போக்குவரத்து இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகின் பல்வேறு நாடுகளும் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தியாவிலும் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாரத் பயோடெக், கேடிலா, செரம் ஆகிய நிறுவனங்கள் கொரோனா தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்துள்ளன. இந்த மருத்துகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையிலான சோதனையில் இருந்துவருகின்றன.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் பல்ராம் பார்கவா நேற்று ஆஜராகி கொரோனா தடுப்பு மருந்து நிலை குறித்து விளக்கம் அளித்தார். அவர் தெரிவித்ததாவது: கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உள்நாட்டு நிறுவனங்கள் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து, 2-வது கட்டசோதனை முடியும் நிலையில் இருக்கிறது. மத்திய அரசு முடிவு செய்தால், அவசர அனுமதியளிப்பது குறித்து பரிசீலிக்கிறோம்’ என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: