காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வர 7 வயது சிறுமிக்கு போலீசார் சம்மன்

பொன்னேரி: பொன்னேரியில் 7 வயது சிறுமிக்கு, காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வரும்படி போலீசார் சம்மன் வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொன்னேரி சிவன் கோயில் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். பொன்னேரியை சேர்ந்த சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான பாஸ்கரன் என்பவரது மகள் அதிகை முத்தரசியை கடந்த 2018ல் பள்ளியில் சேர்த்தபோது அரசு தொடக்கப் பள்ளியில் குடிநீர், கழிப்பறை, பள்ளி கட்டிடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்துள்ளது.மாணவர்கள் கல்வி கற்பதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தும் வகையில் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என மாணவி அதிகை முத்தரசியும், அவரது தந்தை பாஸ்கரனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தொடர்ந்தனர்.

 கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம், ஓராண்டிற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி பழைய கட்டிடத்தை இடித்து, புதிய பள்ளிக் கட்டிடம் கட்டி விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை செய்து தருமாறு உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் பள்ளி கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி அதிகை முத்தரசி மீண்டும் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலையில் மீஞ்சூர் காவல் நிலையத்தில் இருந்து வந்த காவலர்கள் மாணவி அதிகை முத்தரசியை விசாரணைக்கு மீஞ்சூர் காவல் நிலையம் வருமாறு சம்மன் வழங்கியுள்ளனர். 7 வயது சிறுமிக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக நேரில் வருமாறு போலீசார் சம்மன் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, காவல்துறை அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மனுதாரர் வயது குறிப்பிடாமல் வந்த மனுவை விசாரிப்பதற்காக மனுதாரர் அதிகை முத்தரசியின் வீட்டிற்கு சம்மன் கொண்டு செல்லப்பட்டதாகவும், மனுதாரர் சிறுமி என்பதால் காவல் நிலையத்திற்கு வர வேண்டாம், காவல்துறை அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி கொள்வதாக தெரிவித்தனர்.

Related Stories: