தொடர் கனமழையால் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு...!! கரையோர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!!

ஆந்திரா:  ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 34 கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா, தெலுங்கானா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆந்திராவில் கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் ஆற்றின் கரையோரத்தில் உள்ள 34 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும் வெள்ளப்பெருக்கு காரணமாக வாழை, தென்னை, தக்காளி, மிளகாய் மற்றும் நெல் உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகின.

மேலும் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல்வேறு கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனையடுத்து வெள்ள சேதத்தை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்ட ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே கோதாவரி ஆற்றில் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவானது இன்றிரவு 17 லட்சம் கன அடியாகவும், இதனைத்தொடர்ந்து நாளை காலை 12 லட்சம் கன அடியாகவும் தண்ணீர் வெளியேற்றப்படுமென கூறப்படுகிறது. மேலும் நாளை மறுநாள் 8 லட்சம் கன அடி வீதம் தண்ணீரின் அளவு படிப்படியாக குறையுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: