அமெரிக்காவுக்கு கிடைத்த மோசமான அதிபர் டிரம்ப்: மிச்செல் ஒபாமா விளாசல்

நியூயார்க்: ‘அமெரிக்காவுக்கு கிடைத்த மோசமான அதிபர் டொனால்ட் டிரம்ப்’ என்று மிச்செல் ஒபாமா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. இதில் குடியரசுக்கட்சி சார்பில் மீண்டும் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பிடென் களம் இறங்குகிறார். இந்நிலையில் ஜனநாயகக் கட்சியின் மாநாடு காணொலி மூலம் நடத்தப்பட்டது. இதில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமா கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

டொனால்ட் டிரம்ப் ஒரு மோசமான அதிபர். அவர் தனது நிர்வாகத் திறமையை நிரூபிக்கத் தவறிவிட்டார். அமெரிக்கா தன்னுடைய வரலாற்றில் ஒரு மோசமான அதிபரை சந்தித்துவிட்டது. டிரம்ப்பின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக ஒன்றரை லட்சம் மக்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்கள். நமது பொருளாதார நிலை குழப்பமான சூழலுக்குப் போய்விட்டது. லட்சக்கணக்கான மக்கள் வேலைவாய்ப்பின்மையால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பலர் தங்கள் ஆரோக்கியத்தை இழந்துள்ளார்கள்.

பள்ளிகள் எப்படி பாதுகாப்பாக திறக்கப்படப் போகின்றன என்று பலர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இனவெறிக்கு ஆதரவான நடவடிக்கைகளும் அமெரிக்காவில் அதிகமாகி இருக்கின்றன. நான்காண்டுக்கு முன்பு நடந்த தேர்தலின்போது, பல அமெரிக்கர்கள் ஆர்வமாக வாக்களிக்காமல் போய்விட்டார்கள். நம் ஒற்றை வாக்கு என்ன செய்துவிடும் என்று அலட்சியமாகவும், சோர்வாகவும் இருந்தார்கள். அது டிரம்புக்கு சாதகமாகிவிட்டது. அந்த சோர்வை மறந்துவிட்டு உற்சாகமாக எல்லோரும் வாக்களிக்க வேண்டும். இதன்மூலம் நல்ல மாற்றம் நிகழும். இவ்வாறு மிச்செல் ஒபாமா பேசியுள்ளார்.

* ரொம்ப தலைக்கனம்

மிச்செல் பேச்சு குறித்து, வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் டிரம்ப் கூறுகையில், ‘‘பதிவு செய்யப்பட்ட டேப் ரெக்கார்டர் போல மனப்பாடம் செய்து ஒப்பித்துள்ளார் மிச்செல். அதில் உண்மையும் இல்லை. உயிரும் இல்லை. மிச்செலின் தலைக்கனம் மட்டுமே தெரிந்தது. துணை ஜனாதிபதி வேட்பாளர் பற்றி பேசாமல் என்னை நாகரிகமில்லாமல் விமர்சனம் செய்துள்ளார். அவரது கணவர் ஒபாமாவைப் போல வெள்ளை மாளிகையில் நாங்கள் சும்மா இருக்கவில்லை. பன்றிக்காய்ச்சல் பரவிய காலத்தில் ஒபாமாவும், ஜோ பிடெனும் அதனை எப்படி மோசமாகக் கையாண்டார்கள் என்பது உலகுக்கே தெரியும். அதில் மிகப்பெரிய ஊழலையும் செய்தவர்கள் அவர்கள். அடுத்த ஆட்சிக்காலத்திலும் அமெரிக்கா பெரிய வளர்ச்சி அடையும். பொறுத்திருந்து பாருங்கள்’’ என்றார்.

Related Stories: