ரூ.2 கோடி கடனை திருப்பி கேட்ட 3 பேர் மீது சானிடைசர் ஊற்றி எரித்துக்கொல்ல முயற்சி: சொத்து தருவதாக கூறி ஏமாற்றி துணிகரம்

திருமலை: விஜயவாடாவில் ரூ.2 கோடி கடனை தருவதாக கூறி 3 பேரை காரில் எரித்துக்கொலை செய்ய முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆந்திர மாநிலம், விஜயவாடாவை சேர்ந்தவர் கிருஷ்ணா. அதேபகுதியை சேர்ந்தவர் கங்காதரன், ரியல் எஸ்டேட் அதிபர். இவரது மனைவி நாகவல்லி. இவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர்  கடந்த சில மாதங்களுக்கு முன் ரூ.2 கோடி வரை கடன் வாங்கியுள்ளார். கடனை திருப்பி தரும்படி, கிருஷ்ணா உட்பட 3 பேரும் வேணுகோபாலிடம் கேட்டுள்ளனர். ஆனால், கடனை திருப்பி தராமல் நீண்ட காலமாக இழுத்தடித்து வந்துள்ளார்.

இந்நிலையில், வேணுகோபால் நேற்று முன்தினம் கடன் கொடுத்த 3 பேரையும் போனில் தொடர்பு கொண்டு, நீங்கள் கொடுத்த கடனுக்கு ஈடாக இலவச வீட்டுமனையை தாசில்தார் மூலமாக வாங்கித்தருவதாக கூறி 3 பேரையும் காரில் விஜயவாடாவுக்கு அழைத்து சென்றுள்ளார். வழியில், சாலையோரம் காரை நிறுத்திவிட்டு 3 பேருடன் வேணுகோபால் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, திடீரென வேணுகோபால் இருக்கையின் அடியில் மறைத்து வைத்திருந்த சானிடைசரை அவர்கள் மீது ஊற்றி தீ வைத்து, காரை பூட்டிவிட்டு தப்பியோடி விட்டார். இதில், கார் தீப்பிடித்து எரிந்தது. இதைக்கண்ட பொதுமக்கள் கங்காதரன் மற்றும் நாகவல்லியை காயமின்றி மீட்டனர். ஆனால், கிருஷ்ணாவுக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர் விஜயவாடா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில், கார் முழுவதும் எரிந்து சாம்பலானது. பின்னர், வேணுகோபால் படமடா போலீசில் சரணடைந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து வேணுகோபாலை கைது செய்தனர்.

Related Stories: