மலேசிய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு 10 மடங்கு வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்

கோலாலம்பூர்: தற்போதுள்ளதை விட 10 மடங்கு வேகமாக பரவக் கூடிய வீரியமிக்க கொரோனா வைரஸ் மரபணு மாற்றம் மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவின் வுகானில் பரவத்தொடங்கி கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்து வருகின்றது. உலக அளவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் தற்போதுள்ள கொரோனா வைரசை விட 10 மடங்கு வீரியம் மிகுந்த வகையை சேர்ந்த புதிய மரபணு மாற்ற வைரசை அந்நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இந்தியாவில் இருந்து திரும்பி வந்த உணவக உரிமையாளர் கொரோனா தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியுள்ளார்.

அவரை சந்தேகத்தின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொண்டனர். பரிசோதனையின் முடிவில் அவருக்கு ‘டி614ஜி’எனப்படும் புதிய வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இது கொரோனா வைரசை விட 10 மடங்கு அதிகமாக பரவக்கூடிய தன்மை கொண்டது. இது தொடர்பாக மலேசிய சுகாதார இயக்குனர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறுகையில், ‘‘புதிதாக டி614ஜி வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் ஆபத்தான வைரசாகும். இது பல்வேறு முன்னறிவிப்பு இல்லாத சிக்கல்களை உடலில் ஏற்படுத்தக்கூடியது. மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம் என்பதால் மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.” என்றார்.

* தடுப்பூசி பலனளிக்காது

கொரோனா வைரசின் இந்த புதிய மரபணு மாற்றத்தின் மீது தற்போது நடக்கும் தடுப்பூசி ஆய்வுகள் பலனளிக்காது என மலேசிய பொது சுகாதார இயக்குநர் அச்சம் தெரிவித்துள்ளார். அதே சமயம், இது போன்ற வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் அதிகம் காணப்படுவதாகவும், இதனால் நோய் தொற்றின் தீவிரம் அதிகரிக்காது, தற்போது சோதனை கட்டத்தில் இருக்கும் தடுப்பூசிகளின் திறனை இது பாதிக்காது என்றும் உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Stories: