கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிய விவகாரம்: 3 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து கீழே தள்ளிய விவகாரம் தொடர்பாக 3 வாரங்களில் அறிக்கை அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சக்கர நாற்காலியால் வார்டுக்கு அழைத்து வந்தபோது அவரால் இறங்க முடிய வில்லை. இதனையடுத்து கட்டிலுக்கு இறங்கி செல்ல முடியாத  அவரை ஊழியர் ஒருவர் திட்டித்தீர்த்ததோடு, மட்டுமால்லாமல் நாற்காலியிலிருந்து தள்ளிவிட்ட அவலம் நேர்ந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த மற்ற பணியாளர்களோ அல்லது அங்குள்ள நோயாளிகளின் உறவினர்களோ,  அந்த உள்நோயாளிக்கு உதவ முன்வரவில்லை. பின்னர் கீழே விழுந்த அந்த நோயாளி தட்டு தடுமாறி கட்டிலை பிடித்து மேலே ஏறினார். இந்த கொடூர செயலால் அவரது உடல்நிலை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை ஒருவர் வீடியோ எடுத்து, வாட்ஸ் ஆப்பில் அனுப்ப, தற்போது பரவி வருகிறது. இதையடுத்து அந்த ஊழியரை, மருத்துவமனை நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. இதுகுறித்து பேசிய கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் பிரபாகர், நோயாளியிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட மருத்துவமனை ஊழியர் பாஸ்கரன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் நோயாளிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஊழியர் பாஸ்கரன் மீது துறை ரீதியான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து  தள்ளிய விவகாரத்தில் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்த மனித உரிமை ஆணையம் தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனர் 3 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

Related Stories: