ஆதார்/ ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் : முதல்வர் பழனிசாமி அறிவிப்பால் தமிழக மக்கள் நிம்மதி!!

சென்னை : ஆதார் அல்லது ரேஷன் அட்டை, தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதே சமயம் தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற விண்ணப்பிக்குமாறு முதல்வர் பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறையில் கொண்டுவரப்பட்ட தளர்வுகள் ஆக.17 முதல் அமலுக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியப் பணிகளுக்கு தடையின்றி தமிழகம் முழுவதும் பயணிக்க ஏதுவாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாண்புமிகு  அம்மாவின் அரசு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நோய் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், சிகிச்சைகளை அளித்தும், நிவாரணங்களை வழங்கியும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  நோய்த் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொது மக்களின் ஒத்துழைப்பையும், நோய்த் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு,  ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

நோய்த் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க விண்ணப்பிக்கப்படும் இ-பாஸ் விண்ணப்பங்களுக்கு  அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இதன் மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய்த் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் பயணிக்க  (மாவட்டங்களுக்கு இடையே) 17.8.2020 முதல்  ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி / அலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், விண்ணப்பித்த அனைவருக்கும் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

    

பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் இ-பாஸ்க்கு விண்ணப்பம் செய்து, இ - பாஸ் பெற்று பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் நிலையான வழிகாட்டி நடைமுறைகளை கடைபிடிக்கவும், அரசின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் பொதுமக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: