ஆடிக்கிருத்திகையையொட்டி முருகர் கோயில்களின் நுழைவு வாயில் முன் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்: ஊரடங்கால் வெறிச்சோடியது

கலசப்பாக்கம்: கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர கோயில் பகுதியில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது வழக்கம்.  கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், ஆடிக்கிருத்திகை திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால், பக்தர்கள் கோயில் உள்ளே செல்லாத வகையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று ஆடிக்கிருத்திகையையொட்டி அர்ச்சகர்கள் மூலவருக்கு அதிகாலை அபிஷேக ஆராதனைகள் செய்தனர். இதையடுத்து, கோயில் நடை சாத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கோயில் நுழைவாயில் முன் பக்தர்கள் காவடி எடுத்தும், முடி காணிக்கை செலுத்தியும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். மேலும், ஆடிக்கிருத்திகை விழாவில் கலசபாக்கம் பகுதியில் திருவிழா போல் பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால், ஊரடங்கால் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்ததால், கோயில் வளாகம் வெறிச்சோடி காணப்பட்டது. வந்தவாசி: வந்தவாசி அடுத்த தேசூரில் ஆடிக்கிருத்திகை விழாவையொட்டி வள்ளி தேய்வானை சமேத சிவ சுப்பிரமணியர் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், சந்தன காப்பு அலங்காரத்தில் சிவசுப்பிரமணியர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமியை வழிபட்டனர்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் குன்றின் மீது அமைந்துள்ள பாலமுருகன் கோயிலில்  நேற்று முன்தினம் பரணி நட்சத்திர சிறப்பு பூஜையும், நேற்று கிருத்திகையொட்டி காலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர், பாலமுருகன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் குறைந்த அளவு பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்தனர். கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அடுத்த தம்டகோடி திருமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை சாத்தப்பட்டிருந்ததால் காவடி உள்ளிட்ட நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கோயில் வெளியே உள்ள கொடிக்கம்பம் அருகே கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

Related Stories: