உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி இணையதள சேவை

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 4ஜி இணையதள சேவையை மீண்டும் வழங்குவதற்கான சோதனையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால், பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இங்கு அதிவேக 4ஜி இணையதள சேவை முடக்கப்பட்டது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு ஓராண்டு முடிந்து, இப்பகுதிகளில் அமைதி நிலவுகிறது. இதனால், ரத்து செய்யப்பட்ட 4ஜி சேவையை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த சேவையை வழங்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், ‘ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவையை வழங்கத் தயாராக இருக்கிறோம், முதல் கட்டமாக ஜம்மு காஷ்மீரின் 2 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் 4ஜி சேவை தொடங்கப்படுகிறது. அதே நேரத்தில் சர்வதேச எல்லைகளை இணைக்கும் பகுதி, தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக சந்தேகிக்கப்படும் பகுதிகளுக்கு இந்த சேவையை வழங்க முடியாது,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: